இந்த சதம் சஞ்சு சாம்சனின் கேரியரை மாற்றலாம் - சுனில் கவாஸ்கர்
|தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற உதவிய சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மும்பை,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் சஞ்சு சாம்சனும், பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங்கும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்த ஆட்டத்தில் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற உதவிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இந்த சதம் சஞ்சு சாம்சனின் கேரியரை மாற்றலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இந்த இன்னிங்சில் அவரின் ஷாட் செலக்சன் என்னை மிகவும் கவர்ந்தது. இன்று அவர் மீது நீங்கள் குறை சொல்ல முடியாத அளவுக்கு விளையாடினார். தமக்கான நேரத்தை எடுத்துக்கொண்ட அவர் காத்திருந்து சதமடித்தார். இந்த சதம் அவருடைய கேரியரை மாற்றப்போகிறது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இந்த சதத்தால் அவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த சதம் அவருக்கு நிறைய தன்னம்பிக்கை கொடுக்கும். அவருடைய திறமை பற்றி நாம் அறிவோம். இருப்பினும் நீண்ட காலங்களாக தடுமாறி வந்த அவர் இன்று ஒரு வழியாக தம்முடைய திறமையை மற்றவருக்கு காண்பித்துள்ளார்" என்று கூறினார்.