ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற அவங்கதான் காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
|எங்கள் அணியில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர் என ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.
அகமதாபாத்,
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதிசுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி கொல்கத்தாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஐதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 159 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஐதராபாத் தரப்பில் ராகுல் திரிபாதி 55 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட், சக்கரவர்த்தி 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 164 ரன் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கொல்கத்தா தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன், வெங்கடேஷ் ஐயர் 51 ரன் எடுத்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
உண்மையிலேயே இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. முக்கியமான இந்த போட்டியில் வெற்றி பெற்று நாங்கள் இங்கு நிற்பதை நினைத்தால் பெருமையாக உள்ளது. இன்றைய நாளில் எங்கள் அணியில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.
குறிப்பாக மைதானத்தின் தன்மையை பயன்படுத்திக் கொண்ட எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ரன் குவிப்பை முற்றிலுமாக தடுத்து நிறுத்தி விட்டார்கள். ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கிய காரணம் அவர்கள்தான்.
அதோடு எங்கள் அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான திறமை உடையவர்கள் என்பதனால் வித்தியாசமான பவுலிங் லைன் அப் எங்களிடம் இருக்கிறது. நிச்சயம் இறுதி போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.