நான் விளையாடியதிலேயே சிறந்த கேப்டன்கள் இவர்கள்தான் - மொயீன் அலி
|மொயீன் அலி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
லண்டன்,
இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான மொயீன் அலி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இங்கிலாந்து அணிக்காக 8 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும் 67 ஐ.பி.எல் போட்டிகளிலும், உலக அளவில் நடைபெறும் டி20 லீக் கிரிக்கெட்களிலும் கலந்து கொண்டு ஆடி வருகிறார்.
இவர் 2019 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2022 டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்து வெல்ல முக்கிய பங்கு வகித்தார். மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்பட்ட மொயீன் அலிக்கு எதிர்வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை.இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இயன் மோர்கன் தாம் விளையாடியதில் சிறந்த கேப்டன் என்று மொயீன் அலி பாராட்டியுள்ளார். அதை தவிர்த்து இந்தியாவின் எம்எஸ் தோனி தாம் விளையாடிய கேப்டன்களில் சிறந்தவர் என்றும் மொயீன் அலி கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இயன் மோர்கன் நான் விளையாடியதில் சிறந்த கேப்டன். அதே போல எம்எஸ் தோனியையும் நான் சொல்வேன். கண்டிப்பாக இங்கிலாந்துக்காக மோர்கன் நம்ப முடியாத கேப்டனாகவும் தலைவராகவும் செயல்பட்டார். ஒரு சிறந்த தலைவரிடம் உள்ள அனைத்து விஷயங்களும் அவர் சாதித்ததற்கு தேவையான பண்புகளும் அவரிடம் இருந்தன. அவரது தலைமையில் விளையாடியது நம்ப முடியாததாக இருந்தது" என்று கூறினார்.