உலகின் சிறந்த 3 விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் - கில்கிறிஸ்ட் தேர்வு
|உலகின் தலைசிறந்த மூன்று விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களை ஆடம் கில்கிறிஸ்ட் தேர்ந்தெடுத்து உள்ளார்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட். இவர் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆவார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 96 டெஸ்ட், 287 ஒருநாள், 13 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட், உலகின் தலைசிறந்த மூன்று விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுத்து உள்ளார். இதில் ஆடம் கில்கிறிஸ்ட் தன்னுடைய பெயரை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, முதலில் ரோட்னி மார்ஸ் இருக்கிறார். அவர்தான் என்னுடைய ஐடியல். நான் அவர் போலவே இருக்க விரும்பினேன். அடுத்து இந்தியாவின் மகேந்திர சிங் தோனி. அவர் கூலாக இருப்பது எனக்கு பிடிக்கும். அவர் தன்னுடைய வழியில் அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.
இவர்களுக்கு அடுத்து இலங்கையின் குமார் சங்கக்கரா மிகவும் உயர்வான ஒரு இடத்தில் உயர்தரமான பேட்டிங்கை கொண்டவராக இருக்கிறார். அத்துடன் சங்கக்கரா மிகச் சிறந்த விக்கெட் கீப்பராகவும் ஸ்டெம்புகளுக்கு பின்னால் இருந்திருக்கிறார். இவர்கள் மூவரும் சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் ஆவர். இவ்வாறு அவர் கூறினார்.