விராட் கோலி ஓய்வு பெறுவதைப் பற்றி பேசுகிறார்கள் ஆனால் அவர்... - மைக்கேல் வாகன்
|ஆர்.சி.பி அணி எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
லண்டன்,
நடப்பு ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்த அந்த அணி அதன்பின் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று அதிரடியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. இருப்பினும் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
ஆனாலும் இந்த ஐ.பி.எல் தொடரின் முக்கியமான பேசுபொருளாக விராட் கோலியே இருந்து வருகிறார். சி.எஸ்.கே அணிக்கு எதிராகக் களத்தில் அவர் காட்டிய ஆக்ரோஷம் குறித்து தற்பொழுது இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேசியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது, விராட் கோலி அதிலிருந்து விலகி, லண்டனில் சாதாரண ஒரு வாழ்க்கையை நடத்தினார் என்று நினைக்கிறேன். அந்த வாழ்க்கை அவருக்கு பிடித்திருக்கிறது. ஓய்வுக்குப் பிறகு அவர் அப்படியான ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ நினைப்பார்.
விராட் கோலி ஓய்வு பெறுவதைப் பற்றி நீங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவர் தற்போதைய ஐ.பி.எல் சீசனில் மிகச் சிறப்பாக விளையாடி 700-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் இதன் அடிப்படையில் பார்த்தால் அவர் பல ஆண்டுகள் விளையாடுவதற்கு தகுதியோடு இருக்கிறார்.
ஆனால் இன்னும் இரண்டு மூன்று, ஆண்டுகள் ஆகும் பொழுது நிலைமைகள் மாறும். அப்பொழுது அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவார். விராட் கோலி களத்தில் வெளிப்படுத்தும் ஆற்றலை நான் விரும்புகிறேன். அவர் தனது ஆக்ரோஷமான அணுகுமுறையால் களத்தில் கொஞ்சம் குழப்பத்தை உண்டாக்குவார்.
கேமராவை பார்த்து வாயில் விரல் வைத்து அமைதியாக இருங்கள் என்று சொல்லுவார். ஆனால் விளையாட்டுக்கு உங்களுக்கு இப்படியான கதாபாத்திரங்கள் தேவை. மேலும் விளையாட்டில் உங்களை சீட்டின் நுனிக்கு கொண்டு செல்ல இப்படியான சச்சரவுகள் அவசியப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.