< Back
கிரிக்கெட்
எம்.எஸ்.தோனியை விட சிறந்தவர்கள் இந்தியாவில் யாரும் இல்லை - ஸ்டீவ் சுமித் புகழாரம்

image courtesy:AFP

கிரிக்கெட்

எம்.எஸ்.தோனியை விட சிறந்தவர்கள் இந்தியாவில் யாரும் இல்லை - ஸ்டீவ் சுமித் புகழாரம்

தினத்தந்தி
|
29 March 2024 3:37 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனிக்கு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் புகழாரம் சூட்டியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர்.

அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். அதனால் எங்கு சென்றாலும் தோனிக்கு அனைத்து இந்நாள் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து பாராட்டுவது வழக்கமாகும்.

இந்நிலையில் ஸ்டம்புகளுக்குப் பின்னால் தோனியை விட சிறந்தவர்கள் இந்தியாவில் யாரும் இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். தொடரில் புனே அணியில் அவருடன் இணைந்து விளையாடியவருமான ஸ்டீவ் சுமித் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஸ்டம்புகளுக்குப் பின்னால் எம்.எஸ். தோனியை விட சிறந்தவர்கள் இந்தியாவில் யாரும் இல்லை. விளையாட்டையும் ஆட்டத்தின் கோணங்களையும் அவர் புரிந்து கொள்ளும் விதம் வேறு யாருக்கும் இல்லை. அவர் விளையாடுவதற்கு ஒரு அற்புதமான நபர். களத்திலும் வெளியிலும் அவரை நான் மிகவும் ரசித்தேன். அவர் எப்போதும் கூலாக இருப்பவர். நிறைய விஷயங்களில் அவர் எப்பவும் மிகவும் பிசியாக இருக்கிறார். அவர் ஒரு அற்புதமான மனிதர். நான் அவருடன் விளையாடுவதை மிகவும் ரசித்தேன். நான் அவருக்கு கேப்டனாக இருந்தது மகிழ்ச்சி. அவர் நிறைய சந்தர்ப்பங்களில் எனக்கு உதவினார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்