தோனி - கெய்க்வாட் இடையே எந்த வித்தியாசமும் இல்லை - சி.எஸ்.கே. பயிற்சியாளர்
|ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சியை வெற்றி, தோல்விகளை வைத்து அளவிடவில்லை என்று பிளமிங் கூறியுள்ளார்.
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. முதல் முறையாக இரு அணிகளும் புதிய கேப்டன்கள் தலைமையில் மோத உள்ளதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக சி.எஸ்.கே. அணியின் பயிற்சியாளர் பிளமிங் பேசுகையில், தோனிக்கும், ருதுராஜ் கெய்க்வாட்-க்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. தோனி மிகவும் கூலான ஒரு கேப்டன். இப்போது ருதுராஜ் கெய்க்வாட்டும் அப்படித்தான் இருக்கிறார். ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சியை வெற்றி, தோல்விகளை வைத்து நாங்கள் அளவிடவில்லை. சி.எஸ்.கே. அணியிலும், வீரர்கள் மத்தியிலும் அவரின் ஆளுமையை வைத்தே மதிப்பிடுகிறோம். அது நல்ல உச்சத்தில் உள்ளது.
தோனியை போன்று நீண்ட ஆண்டுகளுக்கான கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும் இருப்பார் என்று நம்புகிறோம். அதேபோல் கேப்டன்சி காரணமாக அவர் பேட்டிங் ஸ்லோவாகிவிட்டது என்று சொல்ல முடியாது. ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் மற்றும் கேப்டன்சி மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது. அதேபோல் தோனியின் நட்சத்திர அந்தஸ்து காரணமாக வெளி மாநிலங்களில் நடக்கும் போட்டிகளிலும் அதிகளவிலான ஆதரவு கிடைக்கிறது. ஒவ்வொரு முறை மஞ்சள் படை சூழ மைதானத்தில் களமிறங்குவது வீரர்களுக்கும் பெருமையாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சி.எஸ்.கே. அணி வீரர்களின் பேட்டிங் திறமை அதிகரித்துள்ளது" என்று கூறினார்.