'ஆஸ்திரேலிய அணியில் கோழைகள் இல்லை' - லாங்கர் குற்றச்சாட்டுக்கு கம்மின்ஸ் பதிலடி
|ஆஸ்திரேலிய அணியில் கோழைகள் இல்லை என்று லாங்கர் குற்றச்சாட்டுக்கு கம்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
பெர்த்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கடந்த வாரம் அளித்த ஒரு பேட்டியில், 'எனது பயிற்சி காலத்தில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் உலக கோப்பையை வென்றது. ஆஷஸ் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. டெஸ்டில் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்தது.
ஆனாலும் எனக்கு நீண்ட கால அடிப்படையில் பயிற்சி நீட்டிப்பு வழங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மறுத்தது. எனது முகத்துக்கு நேராக நன்றாக பேசிய வீரர்களில் சிலர், பின்னே சென்று என்ன பேசினார்கள் என்பதை அண்மையில் தெரிந்து கொண்டேன். எனது பயிற்சியின் அணுகுமுறைகள் மற்றும் ஓய்வறையில் நடந்த விஷயங்களை எனக்கு எதிராக கசிய விட்டுள்ளனர். அணி நிர்வாகத்திடம் என்னை பற்றி தவறாக கூறியிருக்கிறார்கள். அத்தகைய நபர்கள் கோழைகள்.' என்று சாடினார்.
ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று (இந்திய நேரப்படி காலை 7.50 மணி) தொடங்க உள்ள நிலையில் அதையொட்டி பேட்டி அளித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்சிடம், லாங்கரின் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கம்மின்ஸ் கூறுகையில், 'ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இப்போது மட்டுமல்ல, எப்போதுமே கோழைகள் இருந்ததில்லை. வீரர்களுடனான தனிப்பட்ட உரையாடல்களை நான் ஒரு போதும் வெளியிடுவதில்லை. சில சமயம் களத்திற்கு வெளியே நடக்கும் விஷயங்கள் மீது கவனம் செலுத்தப்படுவது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் உண்மையில் இது எங்கள் அணியை பாதிக்கவில்லை' என்றார்.