'இந்திய அணியில் இவரை விட சிறந்த ஸ்பின்னர்கள் இல்லை..."- ஹர்பஜன் சிங்
|ஆசிய கோப்பைகான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இடம் பெறாதது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
புது டெல்லி,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ, சமீபத்தில் அறிவித்தது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், திலக் வர்மாவிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். பந்துவீச்சாளர்கள் வரிசையில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சஞ்சு சாம்சன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முக்கியத்துவம் கொடுக்காதது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தவகையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், யுஸ்வேந்திர சாஹலுக்கு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவை விமர்சித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ஹர்பஜன் சிங், "ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வேகப்பந்து வீச்சில் வலுவான அணியாக இருந்தாலும், சுழற்பந்து வீச்சில் போதிய பலம் இல்லை என்பதே எனது கருத்து. ஏனெனில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. தற்போதைய இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலை விட மிக சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதே உண்மை.
குறிப்பாக 50 ஓவர் மற்றும் டி20 போட்டிகளில் யுஸ்வேந்திர சாஹல் மிக சிறந்த வீரர். கடந்த ஒரு சில போட்டிகளில் சாஹல் தனது பங்களிப்பை செய்ய தவறியதால் அவரை குறைத்து மதிப்பிட கூடாது. மிக சிறந்த வீரர்களின் திறமையை ஓரிரு போட்டிகளை அடிப்படையாக வைத்து தீர்மானிப்பது ஏற்புடையது அல்ல. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
இந்திய அணியில் அவரது இருப்பு அவசியம் என்று நினைக்கிறேன். அவருக்கான கதவுகள் இன்னும் மூடப்படவில்லை. உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற இருப்பதால் இந்திய அணியில் அவர் மிகவும் முக்கியம். தற்சமயம் சில போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் நீங்கள் அவருக்கு ஓய்வு கொடுத்திருக்கலாம். ஆனால் அவர் அணியில் இருந்திருந்தால், மீண்டும் சிறப்பாக செயல்பட்டு இருப்பார் என்று நான் நினைக்கிறேன். எந்த ஒரு வீரரும் அணியில் இருந்து கழற்றிவிட்ட பிறகு திரும்பி அணிக்கு வந்தாலும், அந்த வீரர் மீது ஒரு வித அழுத்தம் எப்போதும் இருக்கும்," என்று கூறினார்.