பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் ஏலப்பட்டியலில் 409 வீராங்கனைகளுக்கு இடம்
|பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் ஏலப்பட்டியலில் 409 வீராங்கனைகளுக்கு இடம் கிடைத்துள்ளது.
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. 5 அணிகளுக்கு 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 90 வீராங்கனைகள் தேவைப்படுகிறார்கள்.
இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் வருகிற 13-ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு மும்பையில் நடக்கிறது. ஏலத்திற்கு 1,525 வீராங்கனைகள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அவர்களில் இருந்து 409 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இவற்றில் 246 பேர் இந்தியர்.
163 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் ஆவர். இவர்களில் 202 வீராங்கனைகள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள்.
இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஆஸ்திரேலியாவின் எலிசி பெர்ரி, மெக் லானிங், அலிசா ஹீலே, இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டான், நியூசிலாந்தின் சோபி டேவின், வெஸ்ட் இண்டீசின் டியாந்த்ரா டோட்டின் உள்பட 24 பேருக்கு அதிகபட்ச தொடக்க விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.