அந்த இளம் வீரருக்கு இனி இந்திய அணியில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் - இர்பான் பதான்
|பந்து வீசுவதன் காரணமாக ரியான் பராக் நிறைய வாய்ப்புகளை பெறுவதாக இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
மும்பை,
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை வென்றுள்ள இந்தியா புதிய கேப்டன் சூர்யகுமார் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் தங்களது பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.
முன்னதாக இந்தத் தொடரில் இந்திய இளம் வீரரான ரியான் பராக்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் கடைசி நேரத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய ரியான் பராக் 2-வது போட்டியிலும் முழுமையாக 4 ஓவர்கள் வீசினார்.
இந்நிலையில் பந்து வீசுவதன் காரணமாக ரியான் பராக் நிறைய வாய்ப்புகளை பெறுவதாக இர்பான் பதான் தெரிவித்துள்ளார். எனவே அணி நிர்வாகம் இனிமேல் அவருக்குத் தான் அதிக வாய்ப்பு கொடுக்கும் என்றும் இர்பான் பதான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "தன்னுடைய பந்து வீசும் திறன் காரணமாக ரியான் பராக் இனி நிறைய வாய்ப்பு பெறுவதை நீங்கள் பார்ப்பீர்கள். பல நாடுகளைச் சேர்ந்த அணிகளில் அவரைப் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் இப்படி பந்து வீசும் திறனை பெற்றிருக்கவில்லை. இங்கேதான் ரியான் பராக் எக்ஸ்ட்ரா சாதகத்தை பெறுகிறார். அது மிகவும் சரியானது" என்று பதிவிட்டுள்ளார்.