< Back
கிரிக்கெட்
The welfare of the team is more important than individuals - Gautham Gambhir

Image courtesy: PTI

கிரிக்கெட்

தனி நபர்களை காட்டிலும் அணியின் நலனே முக்கியம் - கவுதம் கம்பீர்

தினத்தந்தி
|
13 July 2024 4:35 AM GMT

உங்களுடைய சொந்த சாதனைகளைப் பற்றி நினைக்க இது தனி நபர் விளையாட்டு கிடையாது என கம்பீர் கூறியுள்ளார்.

மும்பை,

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் வெற்றி பெற்ற பின் சீனியர் வீரர்களான ரோகித், விராட், ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இந்த தொடருடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிந்தது. இதையடுத்து இந்திய அணி புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனி நபர்களை காட்டிலும் அணியின் நலனே முக்கியம், வீரர்கள் அனைத்து வடிவ கிரிக்கெட்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

உண்மையுடன் விளையாட முயற்சி செய்யுங்கள் என்பதே என்னுடைய ஒரே ஒரு மெசேஜ் ஆகும். உங்களால் முடிந்த வரை நேர்மையுடன் விளையாடுங்கள். அதைச் செய்தாலே முடிவுகள் உங்களைத் தேடி வரும். நான் பேட்டை கையிலெடுத்த போது முடிவுகளைப் பற்றி சிந்தித்ததில்லை. அத்துடன் என்னுடைய ஆட்டத்தில் நான் எப்போதும் உண்மையுடன் இருக்க வேண்டும் என்பதை நம்புகிறேன்.

விளையாட்டு வீரர்களின் வாழ்வில் காயங்கள் ஏற்படும். அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஒரு வீரர் விளையாடும்போது அதை தவிர்க்க முடியாது. அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், அதிலிருந்து நீங்கள் மீண்டு வரலாம். மீண்டும் விளையாடலாம். வீரர்கள் அனைத்து வடிவ கிரிக்கெட்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். ஏனெனில், தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கை மிக நீண்ட பயணம் அல்ல. தேசத்துக்காக விளையாடும் போது முடிந்தவரை விளையாட வேண்டும்.

தனி நபர்களை காட்டிலும் அணியின் நலனே முக்கியம். ஏனெனில், கிரிக்கெட் குழு விளையாட்டு. இங்கு அணிதான் எல்லாம். எனவே நீங்கள் விளையாடும் அணிக்காக வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் மட்டும் நீங்கள் விளையாடுங்கள். ஏனெனில் அணி விளையாட்டுக்கு அதுவே தேவைப்படுகிறது.

உங்களுடைய சொந்த சாதனைகளைப் பற்றி நினைக்க இது தனி நபர் விளையாட்டு கிடையாது. இது அணி விளையாட்டு. இங்கே அணி தான் உங்களுக்கு முதலாவதாக இருக்க வேண்டும். வேண்டுமானால் நீங்கள் அணியின் கடைசி நபராக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்