< Back
கிரிக்கெட்
இந்திய அணியின் நலனே எனக்கு முக்கியம் - முகமது ஷமி
கிரிக்கெட்

"இந்திய அணியின் நலனே எனக்கு முக்கியம்" - முகமது ஷமி

தினத்தந்தி
|
23 Oct 2023 10:50 AM IST

"இந்திய அணியின் நலனே எனக்கு முக்கியம்" என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

தர்மசாலா,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தர்மசாலாவில் நடைபெற்றது. இதில், இந்தியா - நியூசிலாந்து மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாடியது. இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அத்துடன், உலகக்கோப்பை தொடரில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் அபாரமாக பந்து வீசிய முகமது ஷமி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் பேசியதாவது, "நடப்பு உலக கோப்பையில் அணிக்கு திரும்பிய முதல் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது எனக்கு நம்பிக்கை அளித்தது. இந்திய அணியின் நலனுக்காக நான் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டதில் எனக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை, என்று கூறினார்.

மேலும் செய்திகள்