இவர்கள் இருவரும் விளையாடிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது - சுப்மன் கில் பேட்டி
|ஜிம்பாப்வேவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஹராரே,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 234 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா 100 ரன்னும், கெய்க்வாட் 77 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 235 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் இந்திய கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது,
உண்மையிலேயே இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் நாங்கள் வெற்றி பாதைக்கு திரும்பியதில் மகிழ்ச்சி. அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக பவர்பிளே ஓவர்களின் போது அவர்கள் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. முதல் போட்டியின் போது எங்களால் அழுத்தத்தை தாங்க முடியாமல் தோல்வியை சந்தித்தோம். ஆனால் இந்த போட்டியில் மீண்டு வந்து வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த அணியில் உள்ள பல வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு புதிய வீரர்கள். சர்வதேச கிரிக்கெட்டுக்கு தற்போதுதான் வந்துள்ளதால் அவர்களால் முதல் போட்டியில் சரியாக செயல்பட முடியவில்லை. ஆனால் இனிவரும் போட்டிகளில் நிச்சயம் அவர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இன்னும் மூன்று போட்டிகள் உள்ளன. அதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.