'பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது'- ரோகித் சர்மா
|வெற்றியின் பெருமை அனைத்தும் ஒட்டுமொத்த அணியினரையும் சாரும் என ரோகித் சர்மா கூறினார்.
தர்மசாலா,
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,
'இதுபோன்று ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் நமது திட்டத்தின்படி எல்லாம் சரியாக நடக்க வேண்டும். இந்த போட்டியில் நாங்கள் நிறைய விஷயங்களை சரியாக செய்தோம். எங்கள் அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு அனுபவம் குறைவாக இருக்கலாம். ஆனால் நிறைய போட்டிகளில் ஆடி இருக்கிறார்கள். எங்கள் அணியினர் அழுத்தமான சுழ்நிலையிலும் அபாரமாக செயல்பட்டனர்.
இந்த வெற்றியின் பெருமை அனைத்தும் ஒட்டுமொத்த அணியினரையும் சாரும். இதுபோன்று தொடரை வெல்லும் போது நாம் ரன்களை திரட்டுவது மற்றும் சதம் அடிப்பது குறித்து பேசுவோம். ஆனால் டெஸ்ட் போட்டியை வெல்ல 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவது முக்கியமானது.
இந்த தொடரில் பந்து வீச்சாளர்கள் தங்களது பொறுப்பை ஏற்று செயல்பட்ட விதத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. குல்தீப் யாதவிடம் நிறைய திறமை இருக்கிறது. அவர் பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவதை பார்க்க நன்றாக இருக்கிறது. ஜெய்ஸ்வால் மிகவும் திறமையான வீரர். கடினமான வீரரான அவர் சவால்களை விரும்பக்கூடியவர். இந்த தொடர் அவருக்கு சூப்பராக அமைந்து இருக்கிறது. அவர் பெரிய ஸ்கோர் அடிப்பதை விரும்புகிறார்' என்றார்.