சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது - ஹர்திக் பாண்ட்யா
|இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
புளோரிடா,
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றுள்ளன. இதில் நேற்று நடைபெற்ற 4வது போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 17 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 179 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் 84 ரன்னும், கில் 77 ரன்னும் எடுத்தனர். இந்நிலையில் வெற்றிக்கு பின்னர் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில்,
இந்த மைதானத்தில் பெரிய எண்ணிக்கையில் இந்திய ரசிகர்கள் வந்து எங்களுக்கு ஆதரவினை அளித்தனர். அவர்கள் கொடுத்த ஆதரவு எங்களை மிகச் சிறப்பாக செயல்பட வைத்தது. இந்திய அணியில் துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வாலின் திறமை மீது எனக்கு எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
இந்த போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடினர். பேட்ஸ்மேன்கள் இவ்வாறு விளையாடுவது பந்து வீச்சாளர்களுக்கும் பெரிய அளவில் உதவியைத் தரும். அதோடு பந்துவீச்சாளர்கள் எப்போதுமே போட்டியை வெற்றி பெற்று தரக்கூடியவர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஏனெனில் போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து விட்டால் போட்டி நம்முடைய கைகளுக்கு வரும். இந்த போட்டியில் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.