சென்னை அணி வீரர்கள் தீபக் சஹார், பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து அணி நிர்வாகம் விளக்கம்!
|சென்னை அணி வீரர்கள் தீபக் சஹார், பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மும்பை,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 18. 2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஹானே 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட், சான்ட்னர், துஷார் தேஸ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த நிலையில் சென்னை அணி வீரர்கள் தீபக் சஹார், பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
"பயிற்சியின்போது கால் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை. தீபக் சாஹருக்கு தொடை தசையில் ஏற்பட்ட காயத்தால் நேற்றைய போட்டியில் ஒரு ஓவர் மட்டும் வீசினார். பின்னர் அவர் களத்தை விட்டு வெளியேறினார், மேலும் போட்டியில் எந்தப் பங்கும் எடுக்கவில்லை. சென்னை வந்ததும் காயத்தின் அளவு சோதிக்கப்படும் எனவும் இருவரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக" சென்னை அணி விளக்கம் அளித்துள்ளது.