தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்..? - வெளியான புதிய தகவல்
|இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.
பெங்களூரு,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் நேற்று நிறைவடைந்தது. 3 போட்டிகள் கொண்ட அந்த தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெற உள்ளன. இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் இன்று தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்படும் நிலையில் அவர்களுடன் சேர்ந்து ஷமி செல்லமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவற விடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
சமீபத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மொத்தம் 24 விக்கெட் கைப்பற்றி மிரட்டிய முகமது ஷமி டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவது, இந்தியாவுக்கு நிச்சயம் பின்னடைவு தான் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு பதிலாக மாற்று வீரரை ஓரிரு நாட்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.