இலங்கை அணி சாம்பியன் ஆவதற்கு தகுதியானவர்கள் - முகமது ரிஸ்வான்
|என்னை பொறுத்தவரை எந்த அணி டாஸ் பற்றி நினைக்கிறதோ அந்த அணி ஒரு சாம்பியன் அணி இல்லை, என்று ரிஸ்வான் கூறியுள்ளார்.
துபாய்,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெறும் என்று நினைத்த போது அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததால் ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, போட்டி முடிந்த பின்னர் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் கூறுகையில்,
நாங்கள் தவறு செய்தோம் ஆனால், நாங்களும் மனிதர்கள் தான். நாங்கள் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக விளையாடினோம். இன்றைய ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் நாங்கள் உத்வேகத்தை இழந்துவிட்டோம். டி-20 கிரிக்கெட்டை பொறுத்தவரை முதல் இன்னிங்சின் முடிவில் எந்த அணிக்கு உத்வேகம் இருக்கிறதோ அந்த அணிக்கு சாதகமான அம்சமாகும்.
என்னை பொறுத்தவரை எந்த அணி டாஸ் பற்றி நினைக்கிறதோ அந்த அணி ஒரு சாம்பியன் அணி இல்லை. இலங்கை அணி இன்று டாஸ் பற்றி கவலை கொள்ளவில்லை. நாங்கள் செய்த தவறுகளை பயன்படுத்தி அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இலங்கை அணி சாம்பியன் ஆவதற்கு தகுதியானவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.