< Back
கிரிக்கெட்
இந்திய அணிக்கு எதிரான தொடர் கடினமாக இருக்கும் - தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா
கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான தொடர் கடினமாக இருக்கும் - தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா

தினத்தந்தி
|
5 Jun 2022 12:35 AM IST

இந்திய அணிக்கு எதிரான 20 ஓவர் தொடர் கடினமாக இருக்கும் என்று தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியினர் இந்தியா வந்துள்ளனர். இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் வருகிற 9-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கிறது.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு எங்களை தயார்படுத்த இந்தியாவுக்கு எதிரான தொடரை பயன்படுத்துவோம். இந்தியாவில் உள்ள சூழ்நிலையும், ஆஸ்திரேலியாவில் உள்ள நிலைமையும் துல்லியமாக ஒரே மாதிரி இருக்காது என்றாலும், எந்த வகையிலான கிரிக்கெட் போட்டியில் ஆடுவதும் எங்களுக்கு நன்மை பயக்கும்.

எங்கள் அணியில் சில புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களால் அணிக்கு எந்த மாதிரியான பங்களிப்பை அளிக்க முடியும் என்பதை அடையாளம் காண போதிய வாய்ப்பு அளிக்கப்படும். எங்களது பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. பேட்டிங் வரிசையை பலப்படுத்துவது எங்களுடைய நோக்கமாகும்.

குயின்டானுடன் தொடக்க வீரராக யாரை இறக்கலாம் என்பது உள்பட தொடக்க வரிசை பேட்டிங்கை வலுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறோம்.சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் இந்திய அணி புதிய தோற்றத்துடன் இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளன.

ஒரு அணியாக நாங்கள் அவர்களை வித்தியாசமாக பார்க்கவில்லை. இந்திய இரண்டாம் தர அணியை எதிர்கொள்வதாக நினைக்கவில்லை. ஏற்கனவே இந்திய 20 ஓவர் அணிக்கு எதிராக விளையாடி இருக்கிறோம். எனவே அதே உத்வேகத்துடன் இந்த போட்டிக்கும் செல்வோம்.

சுழற்பந்து வீச்சு சவாலானது

கடந்த சில வருடங்களாக இந்திய அணியினரின் அணுகுமுறை மற்றும் மனநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இந்திய அணியினர் கடினமாகவும், ஆக்ரோஷமாகவும் விளையாடுகிறார்கள். ரோகித் சர்மா, விராட்கோலி ஆகியோர் இந்த போட்டி தொடரில் ஆடவில்லை என்றாலும் இந்திய அணியினரின் போராட்ட குணம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

அவர்கள் எங்களை எளிதாக எடுத்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அதேநேரத்தில் இந்த தொடர் எங்களுக்கு எளிதாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. இந்த தொடர் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த வகையில் தான் இந்த தொடரை அணுகுவோம்.

இந்திய சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது சவாலானதாகும். இருப்பினும் எத்தகைய பந்து வீச்சையும் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்.

மேலும் செய்திகள்