வெற்றி பறிபோனதற்கு காரணம், ரோகித் செய்த தவறுதான் - இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி
|இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 1 ஓவர் வீசிய சுப்மன் கில் 14 ரன்கள் வழங்கியது இந்தியா வெற்றியை பறிகொடுக்க காரணமாக அமைந்ததாக ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு,
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. கொழும்புவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் அடித்தது.
அதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்தியாவும் 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் போட்டி சமனில் முடிந்தது. இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அப்போட்டியில் 1 ஓவர் வீசிய சுப்மன் கில் 14 ரன்கள் வழங்கியது இந்தியா வெற்றியை பறிகொடுக்க காரணமாக அமைந்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அந்த ஓவரை பயன்படுத்தியே வேகத்தை பெற்றதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
அந்த ஓவரை சுப்மன் கில் வீசாமல் இருந்திருந்தால் இலங்கை 200 ரன்கள் கூட தாண்டியிருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே கில்லிடம் அந்த ஓவரை வழங்கி கேப்டன் ரோகித் தவறு செய்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"ஒரு தவறுதான் வேகத்தை இலங்கை பக்கம் கொண்டு சென்றது. சுப்மன் கில் வீசிய ஓவரில் 14 ரன்கள் அடிக்கப்பட்டது. அதை ஏன் இந்தியா செய்தது? என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அதன் காரணமாக இலங்கை வேகத்தை பெற்றது. அதை செய்யாமல் இருந்திருந்தால் இலங்கை 50 ஓவர்களே விளையாடியிருக்காது. இலங்கை 150 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியிருக்க வேண்டும். இல்லையென்றால் கூட இலங்கை 170 - 190 ரன்கள் தாண்டியிருக்கக் கூடாது. அதன் காரணமாக கடைசியில் இந்தியா 230 ரன்களை சேசிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது" என்று கூறினார்.