இங்கிலாந்துக்கு பிரச்சனையே அந்த இந்திய வீரர்தான் - மைக்கேல் வாகன்
|இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.
இதில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் கலக்கிய பும்ரா 9 விக்கெட்டுகளை சாய்த்த ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்தை தோற்கடிப்பதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு துறையில் கலக்கிய பும்ராவை ஈடுகட்டும் அளவிற்கு பேட்டிங் துறையில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் கலக்கினார்.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால், முதலாவது டெஸ்ட் போட்டியிலும் 80 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் இந்த தொடரில் இங்கிலாந்து அணிக்கு பெரிய தொல்லையாக அமைந்து, இந்தியாவை காப்பாற்றி வருகிறார்.
இந்நிலையில் வெறும் 22 வயதாகும் ஜெய்ஸ்வால் இத்தொடரில் இங்கிலாந்துக்கு பெரிய பிரச்சனையை கொடுத்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "ஆம் அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். அவர்தான் இங்கிலாந்துக்கு பிரச்சனை. உண்மையாகவே அவர் இத்தொடரில் எங்களுக்கு பிரச்சனையாக இருக்கிறார். அதே சமயம் அவர் நம்ப முடியாத வகையில் சிறப்பாக விளையாடுகிறார்" என்று கூறினார்.