
Image Courtesy: @RCBTweets
தேசம் உங்களுடன் உள்ளது - வைரலாகும் ஆர்.சி.பி நிர்வாகத்தின் பதிவு

இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகி உள்ளார்.
பெங்களூரு,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் ஆளுக்கு ஒன்று வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எஞ்சிய போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.
இந்த விஷயம் தற்போது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் இப்படி விராட் கோலி இந்த தொடரில் இருந்து முற்றிலுமாக விலக என்ன காரணம்? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த விஷயத்திற்கான தெளிவான விளக்கத்தை பி.சி.சி.ஐ வெளியிட்டது.
அதில், 'விராட் கோலியின் பிரைவசியை நாங்கள் மதிக்கிறோம். அவர் எங்களிடம் முறைப்படி அவரது தனிப்பட்ட முடிவை தெரிவித்து விட்டே இந்த விடுப்பினை எடுத்துள்ளார். எனவே மீண்டும் ஒருமுறை நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்வது ஒரே ஒரு விஷயம்தான். விராட் கோலி விலகல் குறித்து எந்த ஒரு வதந்தியையோ, யூகங்களையோ பரப்ப வேண்டாம். அவரது முடிவிற்கு மதிப்பு கொடுக்க வேண்டியது முக்கியம். எனவே அவரது விஷயத்தில் யாரும் எந்த தவறான தகவலையும் பரப்ப வேண்டாம்' என பி.சி.சி.ஐ கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் விராட் கோலி இடம் பெறாததை அடுத்து பெங்களூரு அணி தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆர்.சி.பி அணி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
13 ஆண்டுகளில் விராட் கோலி இல்லாத முதல் டெஸ்ட் தொடர். தேசம் உங்களுடன் உள்ளது. நீங்கள் திரும்பத் தயாராகும் போதெல்லாம் உங்கள் இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கும், கிங். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.