< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்...ஆசிய கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்த பாக். வேகப்பந்து வீச்சாளர்கள்...!

Image Courtesy: AFP

கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்...ஆசிய கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்த பாக். வேகப்பந்து வீச்சாளர்கள்...!

தினத்தந்தி
|
3 Sept 2023 7:55 AM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) வரலாற்றில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.

பல்லாகெலெ,

ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 48.5 ஓவரகளில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், பாண்ட்யா இணை அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இருவரும் அரைசதம் அடித்தனர். இதில் இஷான் கிஷன் 82 ரன்னிலும், பாண்ட்யா 87 ரன்னிலும் அவுட் ஆகினர். இவர்களது பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 266 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர். அதாவது ஆசிய கோப்பை வரலாற்றில் (50 ஓவர்) ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்துவது இதுவே முதல் முறை என்ற புதிய சாதனையை படைத்துள்ளனர்.

அந்த வகையில் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா, ஹாரிஸ் ரால்ப் தலா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் சதாப் கான், நவாஸ், ஆகா சல்மான் ஆகிய மூவரும் விக்கெட் எதுவும் எடுக்காமல் ரன்களை வாரி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்