வெஸ்ட்இண்டீஸ் - தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்..!
|வெஸ்ட்இண்டீஸ்-தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
ஜோகன்னஸ்பர்க்,
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாளிலேயே 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தென்ஆப்பிரிக்க ஆடும் லெவன் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த டெஸ்டில் ஆடிய சுழற்பந்து வீச்சாளர் செனுரன் முத்துசாமி, வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜேன்சன் நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் கேஷவ் மகராஜ், சிமோன் ஹார்மெர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியாவுக்கு ஓய்வு அளிக்கபட்டுள்ளது. கீகன் பீட்டர்சன் கழற்றி விடப்பட்டுள்ளார். அவர்களுக்கு பதிலாக ரையான் ரிக்கெல்டன், வியான் முல்டெர் இடம் பெற்றுள்ளனர். முந்தைய போட்டியை போல் இதிலும் நேர்த்தியாக செயல்பட்டு தொடரை வெல்லும் உத்வேகத்துடன் பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி காத்திருக்கிறது. பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி தாக்குப்பிடிக்குமா என்பது சந்தேகம் தான்.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.