உலகக் கோப்பை போட்டியில் கடைசியாக களம் இறங்கும் நட்சத்திரங்கள்
|ரோகித்சர்மா இதுவரை 251 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 30 சதம் உள்பட 10,112 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பை சில முன்னணி வீரர்களுக்கு கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கப்போகிறது. அத்தகைய வீரர்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
ரோகித் சர்மா (இந்தியா):
36 வயதான ரோகித் சர்மாவுக்கு இது 3-வது உலகக் கோப்பை போட்டியாகும். கடந்த உலகக் கோப்பையில் 5 சதங்கள் விளாசி சாதனை படைத்த ரோகித் சர்மா, அதற்கு முந்தைய உலகக் கோப்பையில் ஒரு சதம் அடித்திருந்தார். அவர் இன்னும் ஒரு நூறு எடுத்தால் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதங்கள் எடுத்தவரான ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை தகர்த்து விடுவார்.
அடுத்த உலகக் கோப்பைக்குள் அவருக்கு 40 வயதாகி விடும். அதுவரை அவர் முழு உடல்தகுதியுடன் நீடிப்பது கடினம். அதனால் அவருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்சுக்கு 5 முறை கோப்பையை வென்றுத்தந்த ரோகித் சர்மா, உலகக் கோப்பையிலும் கபில்தேவ், டோனி ஆகிய இந்திய கேப்டன்கள் வரிசையில் வெற்றிக்கொடி நாட்டி வரலாற்று புத்தகத்தில் இடம் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ரோகித்சர்மா இதுவரை 251 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 30 சதம் உள்பட 10,112 ரன்கள் குவித்துள்ளார். இதில் மூன்று இரட்டை சதமும் அடங்கும்.
டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) :
37 வயதை நெருங்கும் ஆஸ்திரேலிய அணியின் இடக்கை பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அடுத்த ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளார். எனவே அவருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டி என்பதில் சந்தேகமில்லை. கடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன் குவித்தவர் (10 ஆட்டத்தில் 3 சதம் உள்பட 647 ரன்) இவர் தான். இந்த ஆண்டு தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் சரியான நேரத்தில் பார்முக்கு வந்து விட்டார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 3 ஒரு நாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தினார். இந்தியாவில் அதிகமான ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாடிய வெளிநாட்டு வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னர் உலகக் கோப்பை போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புடன் உள்ளார்.
குயின்டான் டி காக் (தென்ஆப்பிரிக்கா):
தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்குக்கு 30 வயது தான் ஆகிறது. அதற்குள் ஓய்வு முடிவை அறிவித்து விட்டார். இந்த உலகக் கோப்பையுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாகவும், தொடர்ந்து 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் உலகம் முழுவதும் நடக்கும் லீக் போட்டிகளில் கவனம் செலுத்தப்போவதாகவும் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்க அணிக்காக 145 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 17 சதம் உள்பட 6,176 ரன்கள் சேர்த்துள்ளார். ஏற்கனவே 50 ஓவர் உலகக் தொடர்களில் 2 முறையும், 20 ஓவர் உலகக் கோப்பையில் 4 முறையும் பங்கேற்றுள்ளார். ஆனால் இன்னும் உலகக் கோப்பையை ருசித்ததில்லை. அவரது கனவு இந்த முறையாவது நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) :
கடந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர் 32 வயதான பென் ஸ்டோக்ஸ். இறுதி ஆட்டத்தில் 84 ரன்கள் குவித்து ஹீரோவாக ஜொலித்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓய்வை அறிவித்தார். ஆனால் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு அவரது அனுபவம் அவசியம் என்பதை உணர்ந்த இங்கிலாந்து அணி நிர்வாகம் ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு தொடர்ந்து விளையாடும்படி கேட்டுக் கொண்டது. அவரும் அதை ஏற்று உலகக் கோப்பை போட்டிக்காக மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் மட்டையை சுழற்றுகிறார். அண்மையில் நியூசிலாந்துக்கு எதிராக 182 ரன்கள் எடுத்து, 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என்பது போல் ஒரு அற்புதமான இன்னிங்சை விளையாடினார். இந்த உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு மீண்டும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொல்லி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்):
வங்காளதேச அணியின் கேப்டனும், சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசனுக்கு இது 5-வது மற்றும் கடைசி உலகக் கோப்பை போட்டியாகும். 2007-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய வீரர்களில் இருவர் மட்டுமே தற்போதைய உலகக் கோப்பையிலும் நீடிக்கிறார்கள். அதில் ஒருவர் ஷகிப் அல்-ஹசன். மற்றொருவர் வங்காளதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம்.
உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான 36 வயதான ஷகிப் அல்-ஹசன் இதுவரை 240 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 9 சதம் உள்பட 7,384 ரன்களும், 308 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் 2 சதம் உள்பட 606 ரன்கள் குவித்தார்.
முந்தைய உலகக் கோப்பையில் ரோகித் சர்மா செய்தது மாதிரி இந்த உலகக் கோப்பையில் 4-5 சதங்கள் அடிக்க வேண்டும் என்பதே அவரது ஆசையாகும். ஆனால் பயிற்சியின் போது காலில் காயமடைந்த அவர் உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தை தவற விடும் சூழலில் உள்ளார்.
2025-ம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறார்.
அஸ்வின் (இந்தியா):
இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கு இது 3-வது உலகக் கோப்பை போட்டியாகும். அதுவும் அக்ஷர் பட்டேல் காயமடைந்ததால் கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார். 37 வயதான அஸ்வின் தனக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டி என்று சொல்லி விட்டார். இதுவரை 115 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 155 விக்கெட் வீழ்த்தி இருக்கும் அஸ்வின் இந்திய மண்ணில் சுழல் ஜாலத்தினால் மிரட்டினால் அது அணிக்கு உதவிகரமாக இருக்கும்.
டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி (நியூசிலாந்து):
34 வயது வேகப்பந்து வீச்சாளர்களான இவர்கள் இருவருக்கும் இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும். தனது 3-வது உலகக் கோப்பையில் ஆடும் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ஏற்கனவே நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து விட்டார். அவரது விருப்பத்தின் பேரில் ஒப்பந்த பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனாலும் முக்கியமான பவுலர் என்பதால் அணிக்கு தேர்வானார். 104 ஆட்டங்களில் ஆடி 197 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.
இதே போல் தனது 4-வது உலகக் கோப்பையில் கால்பதிக்கும் டிம் சவுதி இதுவரை 157 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 214 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
இந்த உலகக் கோப்பையில் பவுல்ட்-சவுதி கூட்டணி விக்கெட் வேட்டை நடத்துவதை பொறுத்தே நியூசிலாந்தின் முன்னேற்றம் அமையும்.