< Back
கிரிக்கெட்
கேப்டன் ரிஷப் பண்டிற்கு மட்டுமல்ல மொத்த டெல்லி அணிக்கே அபராதம் விதித்த ஐ.பி.எல். நிர்வாகம்...நடந்தது என்ன?

image courtesy: twitter/@DelhiCapitals

கிரிக்கெட்

கேப்டன் ரிஷப் பண்டிற்கு மட்டுமல்ல மொத்த டெல்லி அணிக்கே அபராதம் விதித்த ஐ.பி.எல். நிர்வாகம்...நடந்தது என்ன?

தினத்தந்தி
|
4 April 2024 2:38 PM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதின.

விசாகப்பட்டினம்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் டெல்லி பந்துவீச்சை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறக்கவிட்டனர். இதன் மூலம் கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 272 ரன்கள் குவித்தது. இது ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது அதிகபட்ச ரன்களாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி 17.2 ஓவர்களில் 166 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

முன்னதாக இந்த போட்டியில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ரிஷப் பண்ட் பந்து வீசுவதில் தாமதப்படுத்தினார். அதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசத் தவறிய டெல்லி 17 ஓவர்கள் மட்டுமே வீசியது. அதனால் கடைசி 3 ஓவரில் அம்பயர்கள் உள்வட்டத்திற்கு வெளியே ஒரு பீல்டரை குறைத்து தண்டனை வழங்கியது டெல்லிக்கு பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் டெல்லி அணி பந்து வீசத் தவறியதால் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு எதிரான கடந்த போட்டியிலும் ரிஷப் பண்ட் நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. அதற்கு ஏற்கனவே ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 2வது முறையாக விதிமுறையை மீறியதால் அவருக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்துடன் சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் முதல் முறை தவறு செய்ததால் கேப்டனுக்கு மட்டும் அபராதம் விதித்த ஐ.பி.எல். நிர்வாகம் டெல்லி வீரர்களுக்கு தண்டனை கொடுக்கவில்லை. ஆனால் தற்போது 2வது முறையாக நேரத்திற்குள் பந்து வீசத் தவறியதால் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அபிஷேக் போரல் உட்பட எஞ்சிய 11 டெல்லி வீரர்களுக்கும் இந்த போட்டிக்கான சம்பளத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்