< Back
கிரிக்கெட்
நாங்கள் கொடுக்கும் வாய்ப்பை இந்திய அணி தவற விட்டு விடக்கூடாது - பாக். முன்னாள் கேப்டன்

image courtesy: PTI

கிரிக்கெட்

நாங்கள் கொடுக்கும் வாய்ப்பை இந்திய அணி தவற விட்டு விடக்கூடாது - பாக். முன்னாள் கேப்டன்

தினத்தந்தி
|
26 July 2024 8:50 AM IST

கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு சென்று பாகிஸ்தான் அணி விளையாடியதாக சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்.

கராச்சி,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று முடிவில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடரை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாய் அல்லது இலங்கையில் போட்டிகளை நடத்துமாறு ஐ.சி.சி-யிடம் பி.சி.சி.ஐ வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக ஐ.சி.சி இன்னும் முடிவு எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் இந்திய அணியை எப்படியாவது பாகிஸ்தானுக்கு வரவழைக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை மற்றும் அதில் இந்திய அணி விளையாடும் இடம், போட்டியை நடத்துவதற்கான செலவுத் தொகை விவரம் உள்ளிட்டவைற்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) பாகிஸ்தான் சமர்பித்துள்ளது. மேலும் இந்திய அணி வரவில்லையெனில் அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு தொடரை நடத்துவோம் என்று பாகிஸ்தான் வாரியம் திட்டவட்டமாக சொல்லி வருகிறது. அத்துடன் இந்தியாவை வர வைப்பது உங்களுடைய வேலை என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு சென்று பாகிஸ்தான் அணி விளையாடியதாக முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். எனவே இம்முறை பாகிஸ்தானுக்கு வந்து விளையாடுவது இந்தியாவின் கடமை என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட தற்போதைய இந்திய அணியின் அனைத்து வீரர்களுமே பாகிஸ்தானில் விளையாடியதில்லை என்றும் மாலிக் கூறியுள்ளார். எனவே பாகிஸ்தானில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்காக தாங்கள் கொடுக்கும் வாய்ப்பை பிசிசிஐ தவற விடக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எந்த வகையான பிரச்சனையும் அல்லது சர்ச்சையும் ஒரு தனிப்பட்ட விஷயம். அது அதற்கு தேவையான வழியில் தனித்தனியாக தீர்க்கப்பட வேண்டும். ஆனால் விளையாட்டில் அரசியல் வரக்கூடாது. கடந்த வருடம் இந்தியாவுக்கு சென்று பாகிஸ்தான் அணி விளையாடியது. எனவே தற்போது பாகிஸ்தானுக்கு வருவதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. இந்திய அணியில் உள்ள தற்போதைய வீரர்கள் பாகிஸ்தானில் விளையாடியதில்லை என்று நினைக்கிறேன். எனவே இது அவர்களுக்கு நல்ல வாய்ப்பு. நாங்கள் இந்திய அணிக்கு சிறந்த வரவேற்பையும் விருந்தோம்பலையும் கொடுப்போம். அவர்கள் வருவார்கள் என்று நான் நம்புகிறேன்" என கூறினார்.

மேலும் செய்திகள்