அந்த 2 வீரர்களில் அதிக ரன்கள் அடிப்பவரின் அணியே பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வெல்லும் - மேக்ஸ்வெல்
|விராட் கோலி - ஸ்டீவ் சுமித் ஆகியோர் நேருக்கு நேராக மோதுவதை பார்க்க காத்திருப்பதாக மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். மறுபுறம் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை இந்தியாவை 3 - 1 (5 போட்டிகள்) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கணிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அந்தத் தொடரில் விராட் கோலி - ஸ்டீவ் சுமித் ஆகியோர் நேருக்கு நேராக மோதுவதை பார்க்க காத்திருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "2 சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் சுமித் - விராட் கோலி நேருக்கு நேர் மோதும் விதம் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் இந்த தொடரில் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை பொறுத்து அவர்களுடைய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கான செல்வாக்கை பெறும் என்று நினைக்கிறேன். அந்த இருவருமே இல்லை என்றாலும் யாரேனும் ஒருவர் பெரிய ரன்களை எடுக்கப் போகிறார். எனவே நம் தலைமுறையின் அந்த 2 சிறந்த பேட்ஸ்மேன்கள் நேருக்கு நேர் விளையாடுவதை பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கும்" என்று கூறினார்.