< Back
கிரிக்கெட்
கயானா மைதானம் இங்கிலாந்தை விட இந்திய அணிக்கே பொருத்தமாக இருக்கும் - இந்திய முன்னாள் வீரர்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

கயானா மைதானம் இங்கிலாந்தை விட இந்திய அணிக்கே பொருத்தமாக இருக்கும் - இந்திய முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
26 Jun 2024 4:16 PM IST

டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் முதலாவது அரையிறுதி ஆட்டத்திலும், இந்தியா - இங்கிலாந்து அணிகள் 2வது அரையிறுதி ஆட்டத்திலும் மோத உள்ளன.

இந்திய நேரப்படி முதலாவது அரையிறுதி ஆட்டம் நாளை காலை 6 மணிக்கும், 2வது அரையிறுதி ஆட்டம் நாளை இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் கயானா மைதானத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது குறித்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இந்தியா - இங்கிலாந்து போட்டி நடைபெறும் கயானா மைதானம் இங்கிலாந்தை விட இந்திய அணிக்கே பொருத்தமாக இருக்கும் எனவும், இங்கிலாந்தின் அடில் ரஷித் மற்றும் ஆர்ச்சரை இந்திய அணி திறம்பட எதிர்கொண்டால் எளிதாக இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வெல்ல முடியும் என இந்திய முன்னாள் வீரர் ராபின் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்த மைதானத்தில் இந்தியாவின் கை மேலோங்கி இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த மைதானத்தில் இங்கிலாந்தை விட இந்தியாவின் பவுலிங் சேர்க்கை பொருத்தமாக இருக்கும். இங்கிலாந்து அணிக்கு ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் முக்கியமானவர்களாக இருப்பார்கள். எனவே அந்த 2 வீரர்களை இந்தியா கவுன்டர் அட்டாக் செய்தால் இங்கிலாந்து பவுலிங் அட்டாக்கை உடைக்க முடியும்.

இந்திய அணியின் பார்வையில் அவர்கள் அனைத்து அடிப்படைகளையும் பூர்த்தி செய்துள்ளதாக கருதுகிறேன். குறிப்பாக மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ் அற்புதமாக செயல்படுகிறார். அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்களும் நிதானமாக செயல்படுகின்றனர். அதே போல எந்த நேரத்திலும் துல்லியமாக பந்து வீசக்கூடிய பும்ரா உங்களிடம் இருக்கிறார். எனவே அது மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை விட இந்தியாவின் மற்றொரு சாவியாக இருக்கும்.

இருப்பினும் ஒரு பவுலர் மட்டுமின்றி வெற்றிக்கு அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாடுவது அவசியம். இந்தத் தொடரில் ஏற்கனவே பும்ரா பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளார். மொத்தத்தில் இங்கிலாந்தை விட இங்குள்ள சூழ்நிலைகள் இந்தியாவுக்கே அதிகமாக பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்