ஐ.சி.சி கோப்பையை வெல்வதே இலக்கு - பாகிஸ்தான் புதிய பயிற்சியாளர்
|பாகிஸ்தான் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கராச்சி,
பாகிஸ்தான் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளராக கேரி கிரிஸ்டனும் (தென்ஆப்பிரிக்கா), டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஜாசன் கில்லெஸ்பியும் (ஆஸ்திரேலியா) நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த காலக்கட்டத்தில் பாகிஸ்தான் அணி மூன்று ஐ.சி.சி தொடர்களை (இரண்டு 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை) சந்திக்க உள்ளது. இந்த 3 தொடர்களில் குறைந்தது ஒன்றையாவது வெல்வதே தனது இலக்கு என்று பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர் கிரிஸ்டன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
அடுத்த 2 ஆண்டுகளில் நடக்கும் மூன்று ஐ.சி.சி. தொடர்களில் ஒன்றை வென்றாலும் அது வியப்புக்குரிய சாதனையாக இருக்கும். பாகிஸ்தான் அணியின் செயல்பாடு சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்வதே எனது பணி.
அதை அடைந்து விட்டால், நாம் கோப்பையை வெல்வதற்கு எப்போதும் பிரகாசமான வாய்ப்பு இருக்கும். என்னை பொறுத்தவரை தற்போது அணி எந்த நிலையில் இருக்கிறது, உயர்ந்த நிலைக்கு அணியை கொண்டு செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.