< Back
கிரிக்கெட்
இந்திய அணி நிர்வாகம் எனக்கு கொடுத்த சுதந்திரமே நான் சிறப்பாக விளையாட காரணம் - சூர்யகுமார் யாதவ்

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

இந்திய அணி நிர்வாகம் எனக்கு கொடுத்த சுதந்திரமே நான் சிறப்பாக விளையாட காரணம் - சூர்யகுமார் யாதவ்

தினத்தந்தி
|
5 Nov 2022 9:30 AM IST

இந்திய அணி நிர்வாகம் எனக்கு கொடுத்த சுதந்திரமே நான் சிறப்பாக விளையாட காரணம் என சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

துபாய்,

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக சூர்யகுமார் யாதவ் (863 புள்ளிகள்) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் ரிஸ்வானை (842 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி அவர் முதலிடம் பிடித்துள்ளார். அதே நேரத்தில் நியூசிலாந்தின் டெவோன் கான்வே 792 புள்ளிகளுடன் தனது மூன்றாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் தவிர, டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற இந்திய வீரர் விராட் கோலி மட்டும் தான் (10-வது இடம்) . இதற்கிடையில், நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் டி20 உலகக் கோப்பையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்நிலையில் டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்துக்கு முன்னேறியது குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

இந்திய அணி நிர்வாகம் எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. அதுவே எனது சிறப்பான ஆட்டத்துக்கு காரணம். ஏனெனில் ஆட்டத்தின் நெருக்கடியான கட்டத்தில் தான் நான் பேட்டிங்கில் களமிறங்கி வருகிறேன். ஆனால் இந்திய அணி நிர்வாகம் என்னை சிறப்பாக கையாண்டார்கள். அதிரடியாக ஆட எனக்கு அனுமதி வழங்கினார்கள். நான் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் இறங்கினாலும் அணி கொடுக்கும் பணியை மகிழ்ச்சியுடன் செய்வேன்.

பத்து முறை பேட்டிங் செய்யும்போது அதில் ஏழு முறை ரன்கள் அடித்தாலே, அதனை நான் பாசிட்டிவான விஷயமாக கருதுகிறேன். டி20 தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய கடின பயிற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் இந்த பயணம் மிகவும் கடினமாக இருந்தது.

அந்த இடத்தில் நீடிக்க இன்னும் கடுமையாக முயற்சிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இது எனக்கு பெரிய சவாலாக இருக்கும். அதில் என்னால் முடிந்தவரை நான் சிறப்பாக செய்வேன். டி20 கிரிக்கெட்டில் நான் இதுவரை கற்றுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான். பேட்டிங் செய்யும்போது, ஏழாவது ஓவரிலிருந்து 15 வது ஒவர் வரை பந்து வீசும் போது எதிரணி ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள்.

அந்த இடத்தில் நான், பேட்டிங் செய்யும்போது எனக்கே சவால்கள் வைத்துக் கொண்டு அதிரடியாக ஆட முயற்சி செய்வேன். நான் நல்ல ஸ்ட்ரைக் ரேட் உடன் விளையாடி ரன்கள் சேர்த்தால் மட்டுமே பின் வரிசையில் வரும் வீரர்கள் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க சுலபமாக இருக்கும். இதனால் அந்தப் பணியை நான் சிறப்பாக செய்வேன் என்று சூர்ய குமார் கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்