< Back
கிரிக்கெட்
எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோரின் கேப்டன்ஷிப் குறித்து பேசிய இந்திய முன்னாள் பயிற்சியாளர்
கிரிக்கெட்

எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோரின் கேப்டன்ஷிப் குறித்து பேசிய இந்திய முன்னாள் பயிற்சியாளர்

தினத்தந்தி
|
26 Aug 2024 11:24 AM GMT

எம்.எஸ். தோனி எப்போதும் எதிரணிகள் தவறு செய்யும் வரை காத்திருந்து வீழ்த்துவார் என்று சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் மகேந்திரசிங் தோனி வெற்றிகரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

அதில் எம்.எஸ். தோனி 3 விதமான ஐசிசி வெள்ளைப் பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அத்துடன் 5 ஐபிஎல் கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ள அவர் மகத்தான கேப்டனாக போற்றப்படுகிறார்.

மறுபுறம் விராட் கோலி ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பைகளை வென்றதில்லை. ஆனால் 2014-ம் ஆண்டு தோனி ஓய்வு பெற்றபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடியது. அப்போது பொறுப்பேற்ற விராட் கோலி தனது ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் மற்றும் அதிரடியான முடிவுகளால் இந்தியாவை 2016 - 2021 வரை உலகின் நம்பர் 1 அணியாக மாற்றினார்.

அவருடைய தலைமையில்தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. அத்துடன் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இந்தியா வரலாறு காணாத சில வெற்றிகளை பெற்றது. அப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியையே முந்திய விராட் கோலி வெற்றிகரமான இந்திய கேப்டனாக சாதனையும் படைத்துள்ளார்.

இந்நிலையில் எம்.எஸ். தோனி எப்போதும் ரிஸ்க் குறைவாக எடுத்து எதிரணிகள் தவறு செய்யும் வரை காத்திருந்து வீழ்த்துவார் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். ஆனால் விராட் கோலி வெளிநாடுகளில் எதிரணிகளை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ரிஸ்க்கான முடிவுகளுடன் களமிறங்குவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தோனி மற்றும் விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து சஞ்சய் பங்கர் பேசியது பின்வருமாறு:-

"தோனி ஒரு கேப்டனாக தாம் எல்லா ரிஸ்க்குகளையும் களைந்திருப்பதை உறுதி செய்து களத்திற்குள் செல்வதற்கு முன் எல்லா கோணங்களிலும் யோசிப்பார். எதையாவது செய்ய வேண்டுமெனில் அதைப் பற்றி நாம் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் எல்லா ரிஸ்க்குகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் நம்பிக்கையுடன் இருக்க முடியும் என்ற அழைப்பை தோனி எடுப்பார். எதிரணி தவறு செய்யட்டும் நான் காத்திருப்பேன் என்று தோனி இருப்பார். அது அவருக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்தது. அவர் ஸ்பின்னர்களை கையாண்டு சூழ்நிலைகளைப் படிப்பதில் கை தேர்ந்தவர்.

விராட் கோலி தலைமையில் வெளிநாடுகளில் இந்தியா தங்களது செயல்பாடுகளை முன்னேற்றியது. வெளிநாடுகளில் அசத்துவதற்கு விராட் கோலி நாம் 5 பவுலர்களுடன் விளையாட வேண்டும், பேட்ஸ்மேன்கள் எக்ஸ்ட்ரா பொறுப்புடன் விளையாட வேண்டும், எதிரணியை கண்டிப்பாக 2 முறை அவுட்டாக்க வேண்டும் போன்ற விஷயங்களை கண்டறிந்து செயல்பட்டார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்