வெஸ்ட்இண்டீஸ்-ஜிம்பாப்வே மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடங்குகிறது
|தொடரை வெற்றியுடன் தொடங்கும் ஆர்வத்துடன் பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி களம் இறங்குகிறது.
புலவாயோ,
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.
பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி தொடரை வெற்றியுடன் தொடங்கும் ஆர்வத்துடன் களம் இறங்குகிறது. டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணியுடன் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி இருக்கும் ஜிம்பாப்வே அணி 7 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. 3 ஆட்டங்களில் டிரா கண்டுள்ளது.
வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக டெஸ்டில் ஒரு வெற்றி கூட பெறாத மோசமான நிலையை மாற்ற கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.