இந்தியா-நியூசிலாந்து மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடக்கம்
|இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது.
ஐதராபாத்,
ஒரு நாள் கிரிக்கெட்
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு மோதலாக அரங்கேறுகிறது.
சில தினங்களுக்கு முன்பு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று தெறிக்கவிட்ட இந்திய அணியினர் அதே உத்வேகத்துடன் நியூசிலாந்தையும் எதிர்கொள்கிறார்கள். அக்டோபர், நவம்பரில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்க இருப்பதால், இந்த ஆண்டில் நடைபெறும் ஒவ்வொரு ஒரு நாள் போட்டிகளும் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த 4 இன்னிங்சில் 3 சதங்கள் அடித்து அட்டகாசப்படுத்திய இந்திய வீரர் விராட் கோலி இந்த தொடரிலும் சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் விலகி இருப்பதால் சூர்யகுமார் யாதவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது உறுதியாகி விட்டது. அத்துடன் 20 ஓவர் போட்டி போன்று ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான அணியிலும் தனது இடத்தை தக்கவைக்க சூர்யகுமாருக்கு இதை விட சரியான சந்தர்ப்பம் கனியாது.
இஷான் கிஷன் வருகை
இலங்கை தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த லோகேஷ் ராகுலுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் நியூசிலாந்து தொடரில் இடம் பெறவில்லை. இதனால் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் களம் இறங்குகிறார். வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டு இரட்டை சதம் விளாசி உலக சாதனை படைத்தார். ஆனால் தற்போது ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடுவதால், இஷான் கிஷன் மிடில் வரிசையில் பயன்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.
பந்து வீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் மிரட்ட காத்திருக்கிறார்கள். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் ஏற்கனவே விலகி விட்டார். அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷபாஸ் அகமது ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கலாம்.
வில்லியம்சன், சவுதி இல்லை
நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் அந்த அணிக்கு பின்னடைவு தான். டாம் லாதம் கேப்டன் பொறுப்பை கவனிக்கிறார். சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் ஒரு நாள் தொடரை வென்ற கையோடு இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸ், டிவான் கான்வே, டாம் லாதம், டேரில் மிட்செல் ஆகியோர் பேட்டிங்கிலும், பிரேஸ்வெல், சான்ட்னெர், பெர்குசன் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
பெரும்பாலான வீரர்களுக்கு இந்திய மண்ணில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் இருப்பதால் இந்திய அணிக்கு கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
லாதம் கருத்து
இதையொட்டி நியூசிலாந்து பொறுப்பு கேப்டன் டாம் லாதம் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, வில்லியம்சன் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இல்லாதது மிகப்பெரிய வெற்றிடமாகும். அதே நேரத்தில் மற்ற வீரர்கள் சாதிப்பதற்கு இது ஒரு வாய்ப்பு. அணியில் இடம் பெற்றுள்ள அனைவரும் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் என்பது ஒரு போனசாகும். சுழற்பந்து வீச்சாளர் சோதி லேசான காயத்தால் அவதிப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் மட்டும் விளையாடமாட்டார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக நாங்கள் இங்குள்ள சூழலில் விளையாடுவதற்கான கடைசி வாய்ப்பு இதுவாகும். எனவே முடிந்த அளவுக்கு இங்குள்ள சீதோஷ்ண நிலையில் நிறைய கற்றுக்கொள்ள முயற்சிப்போம். அண்மையில் பாகிஸ்தானில் விளையாடினோம். அதை விட இந்திய ஆடுகளங்கள் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். விராட் கோலி சிறப்பாக விளையாடி வருவதை அறிவோம். அவரை கட்டுப்படுத்த மிகச்சிறந்த வியூகம் தேவை. ரன் எடுக்க முடியாத அளவுக்கு முடிந்த வரை நெருக்கடி கொடுப்போம் ' என்றார்.
உள்ளூரில் இந்தியாவின் ஆதிக்கம்
கடந்த 2010-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி, 25 இரு நாட்டு ஒரு நாள் தொடரில் விளையாடி அதில் 22-ல் தொடரை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி இருக்கிறது. உள்ளூர் சூழலில் வலுவாக உள்ள இந்தியாவின் வீறுநடைக்கு நியூசிலாந்தால் முட்டுக்கட்டை போட முடியுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 113 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 55-ல் இந்தியாவும், 50-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 7 ஆட்டத்தில் முடிவில்லை. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒரு நாள் தொடரை ஒரு போதும் வென்றதில்லை. 6 முறை நேரடி ஒருநாள் தொடரில் விளையாடி அனைத்திலும் தொடரை பறிகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத் ஆடுகளத்தில் பேட்டிங் மட்டுமின்றி ஓரளவு சுழற்பந்து வீச்சும் எடுபடும். இங்கு இதுவரை நடந்துள்ள 6 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் அடைந்துள்ளது. 2009-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 350 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும்.
வீரர்கள் விவரம்
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்) சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.
நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, மார்க் சாப்மேன் அல்லது ஹென்றி நிகோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர், ஹென்றி ஷிப்லி அல்லது டக் பிரேஸ்வெல், ஜேக்கப் டப்பி அல்லது பிளேர் டிக்னெர், லோக்கி பெர்குசன்.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
அஸ்வின் யோசனைக்கு ரோகித் சர்மா ஆதரவு
'இரவில் பனியின் தாக்கத்தில் பந்து வீசுவது சிரமம். இது பேட்டிங் அணிக்கு எளிதாகி விடும். எனவே இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதத்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களை (50 ஓவர்) முன்கூட்டியே தொடங்க வேண்டும்' என்று இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் கூறியிருந்தார். பகல்-இரவு போட்டியை பிற்பகல் 1.30 மணிக்கு பதிலாக பகல் 11.30 மணிக்கு தொடங்கினால் சரியாக இருக்கும் என்றும் யோசனை தெரிவித்திருந்தார்.
இது பற்றி நேற்று பேட்டி அளித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா கூறுகையில், 'முன்கூட்டியே ஆட்டத்தை தொடங்குவது நல்ல யோசனை தான். ஏனெனில் இது உலகக் கோப்பை போட்டி. இதில் டாஸ் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவதோ, அதனால் குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக இருப்பதோ கூடாது. என்னை பொறுத்தவரை இது அருமையான யோசனை. ஆனால் இது சாத்தியமா என்பது தெரியாது. எந்த நேரத்தில் போட்டியை தொடங்க வேண்டும் என்பதை ஒளிபரப்புதாரர்கள் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.
'நம்பர் ஒன்' இடத்தை பிடிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகளின் தரவரிசையில் இந்தியா 110 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், நியூசிலாந்து 117 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தினால் தரவரிசையில் 114 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேற முடியும். அவ்வாறு நிகழ்ந்தால் நியூசிலாந்து 111 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு சரிந்து விடும்.
20 ஓவர் போட்டிக்கான அணிகளின் தரவரிசையில் தற்போது முதலிடம் வகிக்கும் இந்திய அணி, நியூசிலாந்து உடனான 20 ஓவர் தொடரை கைப்பற்றினால் 'நம்பர் ஒன்' இடத்தை தக்க வைக்கலாம். தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 அல்லது 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் சொந்த மாக்கினால் டெஸ்ட் தரவரிசையிலும் இந்தியா அரியணையை எட்டிப்பிடித்து, ஒரே சமயத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் அணி என்ற அரிய சாதனையை நிகழ்த்தலாம்.
ஸ்ரேயாஸ் அய்யர் விலகல்
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் 28 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் முதுகு வலி காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்கமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று அறிவித்தார். சிகிச்சைக்காக அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் ரஜத் படிதார் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஸ்ரேயாஸ் அய்யர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணியுடன் இணைவார்.