இந்தியா-வங்காளதேசம் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - மிர்புரில் இன்று நடக்கிறது
|இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
அண்மையில் நடந்த நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி இருக்கின்றனர். முன்னணி வீரர்கள் திரும்பி இருப்பதால் அணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது.
வேகப்பந்து வீச்சாளர் 33 வயது முகமது ஷமி சமீபத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். அவரது காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் வங்காளதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் இருந்து நேற்று விலகினார். அவர் டெஸ்ட் தொடரிலும் ஆடுவது சந்தேகம் தான். அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளது.
வங்காளதேச அணியை பொறுத்தமட்டில் வழக்கமான கேப்டன் தமிம் இக்பால் காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக லிட்டான் தாஸ் கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமதுவும் காயத்தால் ஒதுங்கி உள்ளார். இதனால் அனுபவ வீரர்களான லிட்டான் தாஸ், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, முஸ்தாபிஜூன் ரகுமான் ஆகியோரையே அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது.
வங்காளதேச அணி எப்போதும் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படக்கூடியதாகும். இந்திய அணி கடைசியாக 2015-ம் ஆண்டு வங்காளதேசம் சென்று 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஆடிய போது அந்த அணி 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது.
இதனால் இந்திய அணி, வங்காளதேசத்தை எளிதாக எடுத்துக்கொள்ளமால் கவனமுடன் விளையாடி தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூர் அனுகூலத்தை பயன்படுத்தி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்க வங்காளதேசம் வரிந்து கட்டும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் ஒருநாள் போட்டியில் இதுவரை 36 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 30 ஆட்டங்களிலும், வங்காளதேசம் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், முகமது சிராஜ்.
வங்காளதேசம்: லிட்டான் தாஸ் (கேப்டன்), அனாமுல் ஹக், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, அபிப் ஹூசைன், யாசிர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மக்முத், முஸ்தாபிஜூர் ரகுமான், எபாடத் ஹூசைன்.
இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 3, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.