நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இந்திய பந்து வீச்சு கூட்டணி இதுதான் - நாசர் உசேன்
|உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன.
மும்பை,
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன.
இந்நிலையில் தாம் பார்த்ததிலேயே தற்போதுள்ள இந்திய பந்து வீச்சு கூட்டணி தான் மிகவும் சிறந்தது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர் உசேன் பாராட்டியுள்ளார். குறிப்பாக தற்போதைய 5 பவுலர்களில் ஒருவர் இல்லையென்றாலும் மற்றொருவர் அசத்தி வெற்றியை பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு திறமை வாய்ந்தவர்களாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-
"தற்போதைய பந்து வீச்சு கூட்டணி நான் பார்த்ததிலேயே மிகவும் சிறந்த இந்திய பந்து வீச்சு கூட்டணியாகும். கடந்த காலங்களில் இந்திய அணியில் சில மகத்தான பவுலர்கள் இருந்துள்ளனர். ஆனால் தற்போதுள்ள கூட்டணி தான் மிகவும் சிறந்ததாக இருக்கிறது.
அதில் பும்ரா விக்கெட்டை எடுக்க தவறினால் சிராஜ் எடுத்துக் கொடுப்பார். ஒருவேளை சிராஜ் எடுக்க தவறினால் ஷமி எடுப்பார். ஒருவேளை அவர்கள் விக்கெட்டை எடுக்க தவறினால் 2 ஸ்பின்னர்கள் வந்து உங்களுக்கு விக்கெட்டை எடுத்துக் கொடுப்பார்கள். பொதுவாக இந்திய அணியில் 5 சிறந்த பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். ஆனால் இவர்கள் பந்து வீச்சில் 5 சிறந்த வீரர்களாக இருக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.