< Back
கிரிக்கெட்
பந்துவீச்சாளர்கள் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை எங்களுக்கு சாதகமாக திருப்பினர் - ரிஷப் பண்ட்

Image Courtesy: X (Twitter)

கிரிக்கெட்

பந்துவீச்சாளர்கள் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை எங்களுக்கு சாதகமாக திருப்பினர் - ரிஷப் பண்ட்

தினத்தந்தி
|
8 May 2024 5:01 PM IST

4 ஓவரில் 25 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லி,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் பொரேல் 65 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 4 ஓவரில் 25 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை எங்களுக்கு சாதகமாக திருப்பினர்.

பந்துவீச்சாளர்கள் இப்படி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதை பார்க்க அருமையாக உள்ளது. ஒவ்வொரு போட்டியிலிருந்தும் நாங்கள் பல்வேறு விசயங்களை கற்று வருகிறோம். வெற்றியோ தோல்வியோ அதில் கிடைக்கும் பாடங்கள் எங்களுக்கு உதவியாக இருக்கிறது.

குல்தீப் யாதவ் எப்போதுமே மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்த போட்டி மிகவும் நெருக்கமாக சென்று முடியும் என்று எதிர்பார்த்தோம். அதேபோன்று நெருக்கமாகவே சென்று முடிந்துள்ளது. இருப்பினும் 200 ரன்களில் அவர்களை சுருட்டியதில் மிகவும் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்