அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த பேட்ஸ்மேன்... ஆஸ்திரேலிய வீரரை தேர்வு செய்த தினேஷ் கார்த்திக்
|இந்த நேரத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஹெட் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி முன்னள் வீரர் தினேஷ் கார்த்திக். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து அவர் பல்வேறு நாடுகளில் நடைபெற்றும் டி20 லீக் போட்டிகளில் ஆடி வருகிறார். மேலும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தற்போது யார் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் அளித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது,
டிராவிஸ் ஹெட் கொஞ்சம் முன்னால் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் இன்னும் அவருக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எனவே இந்த நேரத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஹெட் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்று நான் கூறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.