நடப்பு தொடரில் முடிவுக்கு வந்த பெங்களூரு அணியின் கோப்பை கனவு..?
|நடப்பு சீசனில் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
பெங்களூரு,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் குறிப்பிட்ட 5 அணிகளுடன் 2 முறையும், 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு ஒரு அணி குறைந்தது 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.
இந்த தொடரில் இதுவரை 36 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான், கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த 10 அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
பெங்களூரு அணிக்கு இன்னும் 6 போட்டிகளே எஞ்சியுள்ளது. அதில் அனைத்திலும் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகளே பெற முடியும். இருப்பினும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மற்ற அணிகளின் முடிவை சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் நடப்பு சீசனில் பெங்களூரு அணியின் கோப்பை கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது.
கடந்த 16 சீசன்களாக கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்து காத்திருந்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.