< Back
கிரிக்கெட்
ஜடேஜா, தோனி போராட்டம் வீண்: பிளேஆப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணி
கிரிக்கெட்

ஜடேஜா, தோனி போராட்டம் வீண்: 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணி

தினத்தந்தி
|
18 May 2024 6:36 PM GMT

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.

பெங்களூரு,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.

'பிளே-ஆப்' சுற்றில் எஞ்சிய ஒரு இடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 68-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது.

சென்னை அணியில் ஒரு மாற்றமாக மொயீன் அலிக்கு பதிலாக மிட்செல் சான்ட்னெர் சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் நாடு திரும்பிய வில் ஜாக்சுக்கு பதிலாக மேக்ஸ்வெல் இடம் பெற்றார்.

'டாஸ்' ஜெயித்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினார்கள். குறிப்பாக விராட்கோலியின் ஆட்டத்தில் அதிக ஆக்ரோஷம் தெரிந்தது. 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் சுமார் 40 நிமிட பாதிப்புக்கு பிறகு ஆட்டம் தொடர்ந்தது.

அதன் பிறகு இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி ரன்னை உயர்த்தினார்கள். ஸ்கோர் 78 ரன்னை எட்டிய போது (9.4 ஓவரில்) விராட் கோலி 47 ரன்னில் (29 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சில் டேரில் மிட்செலிடம் பவுண்டரி அருகில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ரஜத் படிதார் களம் புகுந்தார். சிறிது நேரத்தில் 4-வது அரைசதம் அடித்த பிளிஸ்சிஸ் 54 ரன்னில் (39 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து கேமரூன் கிரீன், ரஜத் படிதாருடன் இணைந்தார். வேகமாக மட்டையை சுழற்றிய இருவரும் ரன்வேகத்தை குறையாமல் பார்த்துக் கொண்டனர்.

ரஜத் படிதார் 41 ரன்னில் (23 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் டேரில் மிட்செலிடம் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார். அடுத்து களம் கண்ட தினேஷ் கார்த்திக் 14 ரன்னில் (6 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) துஷர் தேஷ்பாண்டே பந்து வீச்சிலும், மேக்ஸ்வெல் 16 ரன்னில் (5 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஷர்துல் தாக்குர் பந்து வீச்சிலும் டோனியிடம் கேட்ச் ஆனார்கள்.

20 ஓவரில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் அந்த அணி 6-வது முறையாக 200 ரன்னுக்கு மேலாக எடுத்துள்ளது. 18 ரன்னில் இருக்கையில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய கேமரூன் கிரீன் 38 ரன்களுடனும் (17 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), மஹிபால் லோம்ரோர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டும், துஷர் தேஷ்பாண்டே, மிட்செல் சான்ட்னெர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் (0) மேக்ஸ்வெல் பந்து வீச்சில் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் (4 ரன்) வந்த வேகத்திலேயே வெளியேறினார். இதனால் அந்த அணி 19 ரன்னுக்குள் 2 விக்கெட்டை (2.2 ஓவரில்) இழந்தது. இதைத்தொடர்ந்து ரஹானே, ரச்சின் ரவீந்திராவுடன் சேர்ந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 85 ரன்னாக உயர்ந்த போது (9.1 ஓவரில்) ரஹானே 33 ரன்னில் (22 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெர்குசன் பந்து வீச்சில் பிளிஸ்சிஸ்சிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

அடுத்து ஷிவம் துபே களம் இறங்கினார். முதல் அரைசதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா 61 ரன்னில் (37 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். அடுத்த ஓவரில் ஷிவம் துபே (7 ரன்) கேமரூன் கிரீன் பந்து வீச்சில் பெர்குசனிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த மிட்செல் சான்ட்னெர் (3 ரன்) நிலைக்கவில்லை.

7-வது விக்கெட்டுக்கு டோனி, ஜடேஜாவுடன் கைகோர்த்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். கடைசி ஓவரில் முதல் பந்தில் 110 மீட்டர் தூரத்துக்கு பிரமாண்டமான சிக்சர் விளாசிய டோனி (25 ரன், 13 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடுத்த பந்தில் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார்.

20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட்டுக்கு 191 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரவீந்திர ஜடேஜா 42 ரன்களுடனும் (22 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ஷர்துல் தாக்குர் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூரு தரப்பில் யாஷ் தயாள் 2 விக்கெட்டும், மேக்ஸ்வெல், முகமது சிராஜ், பெர்குசன், கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

14-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 7-வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளை எட்டியது. அத்துடன் அந்த அணி தொடர்ச்சியாக 6-வது வெற்றியை ருசித்து அசத்தியது. சென்னை அணி 7-வது தோல்வியை சந்தித்து 14 புள்ளிகளிலேயே நீடித்தது.

சம புள்ளிகளில் இருந்தாலும் ரன்-ரேட் அடிப்படையில், சென்னையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 9-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. சென்னை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. நடப்பு சாம்பியன் சென்னை அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது இது 3-வது முறையாகும்.

மேலும் செய்திகள்