< Back
கிரிக்கெட்
அவர் கொடுத்த ஆலோசனைகளே சதம் அடிக்க உதவியது - இப்ராஹிம் சத்ரான்

image courtesy;ICC

கிரிக்கெட்

அவர் கொடுத்த ஆலோசனைகளே சதம் அடிக்க உதவியது - இப்ராஹிம் சத்ரான்

தினத்தந்தி
|
8 Nov 2023 8:47 AM IST

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

மும்பை,

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 291 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் இப்ராகிம் சத்ரான் சதம் (129 ரன்) அடித்து அசத்தினார்.

இதையடுத்து 292 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 91 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் - கம்மின்ஸ் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 293 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் இரட்டை சதம் (201 ரன்) அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி 3-வது முறையாக பங்கேற்றுள்ளது. ஆனால் அந்த அணியைச் சேர்ந்த வீரர்கள் யாரும் உலகக்கோப்பையில் சதம் அடிக்கவில்லையே என்ற நீண்ட கால ஏக்கத்தை இப்ராஹிம் சத்ரான் நேற்று தணித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 129 ரன்கள் குவித்த சத்ரான், உலகக்கோப்பையில் குறைந்த வயதில் சதம் அடித்த 4-வது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கு முன்பாக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தங்களுடைய அணியை நேரில் சந்தித்துக் கொடுத்த ஆலோசனைகளே சதமடிக்க உதவியதாக சத்ரான் கூறியுள்ளார்.

21 வயதான சத்ரான் நிருபர்களிடம் கூறுகையில், 'உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் சதங்கள் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக கடினமாக உழைக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதத்தை தவற விட்ட நான் இந்த ஆட்டத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். ஆடுகளம் பேட்டிங்குக்கு நன்றாக இருந்தது.

போட்டிக்கு முந்தைய நாள் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை சந்தித்து பேசினேன். அவர் தனது அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவரது பேச்சு எனக்கு மிகுந்த நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளித்தது. அதற்காக அவருக்கு நன்றி' என்றார்.

மேலும் செய்திகள்