38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
|தொடக்க நாளான இன்று 16 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.
புதுடெல்லி,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் 'எலைட்', 'பிளேட்' என்று இரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எலைட் பிரிவில் உள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் சவுராஷ்டிரா, 2 முறை சாம்பியன் விதர்பா, ஜார்கண்ட், மாராட்டியம், ராஜஸ்தான், அரியானா, சர்வீசஸ், மணிப்பூரும், 'பி' பிரிவில் 41 முறை சாம்பியனான மும்பை, பெங்கால், ஆந்திரா, கேரளா, சத்தீஷ்கார், உத்தரபிரதேசம், அசாம், பீகாரும், 'சி' பிரிவில் கர்நாடகா, பஞ்சாப், ரெயில்வே, தமிழ்நாடு, கோவா, குஜராத், திரிபுரா, சண்டிகாரும், 'டி' பிரிவில் மத்தியபிரதேசம், உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், பரோடா, டெல்லி, ஒடிசா, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரும் இடம் பிடித்து இருக்கின்றன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் அங்கம் வகிக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். மோசமான இடத்தை பெறும் 2 அணிகள் அடுத்த சீசனில் 'பிளேட்' பிரிவுக்கு தரம் இறக்கப்படும்.
'பிளேட்' பிரிவில், கடந்த சீசனில் சொதப்பியதால் எலைட் பிரிவில் இருந்து தரம் இறக்கப்பட்ட நாகலாந்து, ஐதராபாத் மற்றும் மேகாலயா, சிக்கிம், மிசோரம், அருணாசலபிரதேசம் ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சீசனில் 'எலைட்' என்ற முன்னணி பிரிவுக்கு முன்னேற்றம் காணும்.
இதன் லீக் சுற்று ஆட்டம் பிப்ரவரி 19-ந் தேதி முடிவடைகிறது. கால்இறுதி ஆட்டங்கள் பிப்.23-ந் தேதியும், அரைஇறுதி ஆட்டங்கள் மார்ச் 2-ந் தேதியும், இறுதிப்போட்டி மார்ச் 10-ந் தேதியும் தொடங்குகிறது.
இந்த போட்டியில் இந்திய அணிக்காக ஆடிய ரஹானே (மும்பை), புஜாரா (சவுராஷ்டிரா), ஹனுமா விஹாரி (ஆந்திரா), மயங்க் அகர்வால் (ஆந்திரா), இஷாந்த் ஷர்மா (டெல்லி), உமேஷ் யாதவ் (விதர்பா), திலக் வர்மா (ஐதராபாத்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டு தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்களது திறமையை வெளிப்படுத்த தயாராகியுள்ளனர்.
தொடக்க நாளான இன்று 16 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் குஜராத் மாநிலம் வல்சத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சாய்கிஷோர் தலைமையிலான தமிழக அணி, சின்டன் கஜா தலைமையிலான குஜராத் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.