ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி இன்று தொடக்கம்
|தொடக்க டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
லண்டன்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பர்மிங்காமில் நடந்த தொடக்க டெஸ்டில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
தொடக்க டெஸ்டில் அதிரடியாக விளையாடி முதல் நாளிலேயே டிக்ளேர் செய்து ஆச்சரியப்படுத்திய இங்கிலாந்து அணி நெருங்கி வந்து தோற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் உள்ள இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்படுகிறது. விரலில் ஏற்பட்ட காயத்தால் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருப்பதால் வேகப்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஆலி ராபின்சன், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங்கு என்று 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் தாக்குதலை தொடுக்க ஆயத்தமாகிறது. பர்மிங்காம் டெஸ்டில் அசத்திய பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். கடந்த சில போட்டிகளில் தடுமாறிய மார்னஸ் லபுஸ்சேன் ரன்குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.