இங்கிலாந்துக்கு எதிரான அந்த தொடர்தான் எனது வாழ்க்கையில் திருப்புமுனை - அஸ்வின் நெகிழ்ச்சி
|5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை தொடங்குகிறது.
தர்மசாலா,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
தொடரை இந்தியா ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்த டெஸ்டின் மூலம் கிடைக்கும் புள்ளி இரு அணிக்கும் முக்கியமானதாகும்.
இன்னொரு பக்கம் இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வினுக்கு இது 100-வது டெஸ்டாக இருப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மைல்கல்லை எட்டும் 14-வது இந்தியர், முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெறுகிறார். இதுவரை 99 டெஸ்டில் ஆடி 507 விக்கெட் வீழ்த்தி உள்ள 37 வயதான அஸ்வின் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
100-வது டெஸ்டில் பங்கேற்பது நிச்சயம் மிகப்பெரிய தருணம். சென்றடையும் இடத்தை காட்டிலும் இந்த பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பயணத்தில் நிறைய ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளேன். நிறைய விஷங்களை கற்றும் இருக்கிறேன். 100-வது டெஸ்ட் என்பதற்காக இந்த போட்டிக்கு நான் தயாராகும் விதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. வழக்கம் போலவே தயாராகிறேன். எங்களுக்கு டெஸ்டில் வெற்றி பெறுவது தான் முக்கியம்.
2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடர் தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனை. இதில் எனது பந்து வீச்சில் அலஸ்டயர் குக், கெவின் பீட்டர்சன் நிறைய ரன்கள் குவித்து விட்டனர். தோல்வியை தழுவிய பிறகு என்னை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற பேச்சு அடிபட்டது. தேர்வு குழு உறுப்பினர்களில் ஒருவர் என்னிடம் பேசினார். இந்த தொடர் (4 டெஸ்டில் 14 விக்கெட்) எனக்கு நிறைய படிப்பினையை கற்றுத்தந்தது. நான் என்ன தவறு செய்தேன், எந்த விஷயத்தில் கவனம் செலுத்தி பந்துவீச்சில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக எனக்குள் நிறைய மாற்றங்களை செய்து கொண்ட நான், 2013-ம் ஆண்டில் உள்நாட்டில் நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் (4 டெஸ்டில் 29 விக்கெட்) அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக ஜொலித்தேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களது அபாரமான பந்துவீச்சு எது என்று கேட்கிறீர்கள். 2018-ம் ஆண்டு பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் எனது பந்து வீச்சையே ஆகச்சிறந்தது என்று வர்ணிப்பேன். இதில் இரு இன்னிங்சிலும் நான் பந்து வீசினேன். 3-வது நாள் காலையில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். இந்த டெஸ்டில் மொத்தம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினேன். ஆனால் அந்த டெஸ்டில் நெருங்கி வந்துதோற்று விட்டோம். இதே ஆண்டில் செஞ்சூரியனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் முதல் நாளில் 4 விக்கெட் சாய்த்தேன். மேலும் இரு விக்கெட்டுகள் நழுவிப் போனது. இந்த பந்து வீச்சும் தனித்துவமானது.
இதே போல் ஜோ ரூட், ஸ்டீவன் சுமித், கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு எதிராக பந்துவீசுவதை எப்போதும் விரும்புவேன். உலகின் தரமான பேட்ஸ்மேன்களான இவர்களுக்கு எதிராக பந்து வீசும் போது சிறந்த பந்துவீச்சு வெளிப்படும்.
ஒரு கிரிக்கெட் வீரராக எனது பயணத்தை தொடங்கியபோது என்னுடைய குடும்பத்தின் ஆதரவு மிகவும் முக்கியமானதாக இருந்தது. இப்போதும் போட்டி குறித்தும், அதில் நான் எப்படி செயல்படுகிறேன் என்பது குறித்தும் எனது தந்தை 40 முறையாவது போன் பேசுவார். அதனால் என்னை விட எனது அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகளுக்கு தான் இது மிகப்பெரிய தருணமாக இருக்கும். குறிப்பாக இந்த டெஸ்ட் போட்டியை எனது மகள்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். என்னை பொறுத்தவரை 100 என்பது வெறும் நம்பர் தான். ஜாகீர்கான் 100 டெஸ்டில் விளையாடவில்லை. வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த டோனி 100 டெஸ்டில் விளையாடி இருக்கலாம். ஆனால் அதற்குள் ஓய்வு பெற்று விட்டார்.
இவ்வாறு அஸ்வின் கூறினார்.