பெங்களூரு அணியில் காலம் காலமாக இருக்கும் பிரச்சினை அதுதான் - ஸ்டூவர்ட் பிராட்
|பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் பேலன்ஸ் இல்லாமல் இருப்பதாலேயே பெங்களூரு வெற்றி பெற தடுமாறுவதாக பிராட் கூறியுள்ளார்.
பெங்களூரு,
17-வது ஐ.பி.எல். தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதில் 2 போட்டிகளில் தோல்வியும், 1 போட்டியில் வெற்றியும் கண்டுள்ளது.
குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த 3-வது போட்டியில் விராட் கோலி 83 ரன்கள் எடுத்த உதவியுடன் பெங்களூரு 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை சேசிங் செய்த கொல்கத்தா பில் சால்ட் 30, சுனில் நரேன் 47, வெங்கடேஷ் ஐயர் 50, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்கள் எடுத்த உதவியுடன் 16.5 ஓவரிலேயே எளிதாக வென்றது. அந்தளவுக்கு ஆர்சிபி பவுலர்கள் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கி வெற்றியை கோட்டை விட்டனர். அதனால் இது போன்ற பவிலிங்கை வைத்துக்கொண்டு பெங்களூரு கோப்பையை வெல்ல முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் காலம் காலமாக பெங்களூரு அணியில் பேட்டிங் மிகவும் பவராக இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். ஆனால் பவுலிங்தான் அதற்கு நேர்மாறாக காலம் காலமாக பிரச்சனையாக இருப்பதாக அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் பேலன்ஸ் இல்லாமல் இருப்பதாலேயே பெங்களூரு வெற்றி பெற தடுமாறுவதாகவும் பிராட் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "பெங்களூருவில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்துள்ள கொல்கத்தாவை பாராட்டும் நீங்கள் ஆர்.சி.பி. அணியின் பவுலிங்கையும் பார்க்க வேண்டும். பிட்ச்சில் கட்டர், ஸ்லோயர் போன்ற பந்துகளை கொல்கத்தா சரியாக வீசியது. அதனால் ஆர்.சி.பி. பேட்ஸ்மேன்களால் அந்த பந்துகளை தொடர்ச்சியாக அடிக்க முடியவில்லை ஆனால் ஆர்.சி.பி. பவுலர்கள் வந்ததும் அதிகப்படியான வேகத்தில் ஷாட்டாகவும் கணிக்கும் வகையிலும் வீசியதால் அந்தப் பந்துகள் பவுண்டரிக்கு வெளியே சென்றன.
ஆர்சிபி அணியில் இதுதான் பிரச்சினையாகும். பல வருடங்களாக அவர்களுடைய பேட்டிங் ஸ்டார் பவருடன் வலுவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் அவர்களுடைய பவுலிங் கூட்டணி போட்டிகளை வெற்றி பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு இருப்பது போல் தெரியவில்லை. என்னுடைய தனிப்பட்ட பார்வையில் அது பேலன்ஸ் இல்லாத அணியைப்போல் தெரிகிறது. அவர்களுடைய வெளிநாட்டு வீரர்கள் நன்றாக இருப்பதாக தோன்றுகிறது" என்று கூறினார்.