அந்த தமிழக வீரர் ஜான்டி ரோட்ஸ் போல பீல்டிங் செய்கிறார் - அஸ்வின் பாராட்டு
|டி.என்.பி.எல். தொடரில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
சென்னை,
8-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ஷாருக்கன் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய கோவை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்களை சேர்த்தது. இந்த இலக்கை திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் எட்டி அசத்தியது. சிறப்பாக ஆடிய திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 46 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கில் 4 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் மூலமாக ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இந்நிலையில் திண்டுக்கல் அணியின் வீரர் சரத் குமார் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் போல பீல்டிங் செய்வதாக அஸ்வின் பாராட்டியுள்ளார்.
இந்த வெற்றி குறித்து திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பேசுகையில், "இந்த வெற்றி ஒரு வேகத்தில் நடந்த சம்பவமாக பார்க்கிறேன். ஏனென்றால் சேலம் அணியிடம் தோல்வியடைந்த ஒரே அணி நாங்கள் மட்டும்தான். இந்த சீசனின் தொடக்கம் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. ஆனால் சரியான நேரத்தில் வெற்றிகளை பெறத் தொடங்கினோம்.
இந்த வெற்றியில் சரத் குமாரின் பங்கு மிகவும் அதிகம். மைதானத்தின் எந்த பக்கம் நிற்க வைத்தாலும் பாய்ந்து பாய்ந்து ஜான்டி ரோட்ஸ் போல் பீல்டிங் செய்து கொண்டே இருந்தார்" என்று கூறினார்.