கிரிக்கெட்டில் அந்த விதிமுறை அகற்றப்பட வேண்டும் - பும்ரா பேட்டி
|எப்போதும் பவுலர்களை விட பேட்ஸ்மேன்கள்தான் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள் என்று ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார்.
மும்பை,
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ஐசிசி 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.
ஏனெனில் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக பந்து வீசி இருந்தார். இந்த தொடரில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி நிலையில், மிகக்குறைவான ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். அதன் காரணமாக அவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
கடந்த 2016-ல் இந்திய அணியில் அறிமுகமான அவர் வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசினார். அதன் காரணமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அசத்திய அவரால் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்கள் காணப்பட்டன.
ஆனால் 2018-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமான பும்ரா எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றி நாயகனாக அவதரித்தார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து வரும் அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் எப்போதும் பவுலர்களை விட பேட்ஸ்மேன்கள்தான் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள் என்று ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். இருப்பினும் உண்மையில் பவுலர்கள்தான் கிரிக்கெட்டை நடத்துவதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் நோபால் போட்டால் பிரீ ஹீட் என்ற பவுலர்களுக்கு பாதகமான விதிமுறையை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் பும்ரா பேசியது பின்வருமாறு:- "நான் பந்து வீச்சாளர்களுக்கான வழக்கறிஞர். நமது நாடு பெரிய பேட்ஸ்மேன்களை விரும்பும் என்பதை நான் நியாயமாக புரிந்து கொள்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்த வரை பவுலர்கள்தான் விளையாட்டை நடத்துகின்றனர். நான் டெஸ்ட் போட்டிகள் தொலைக்காட்சியில் அதிகமாக காண்பிக்கப்பட்ட தலைமுறையில் இருந்து வந்தவன். எனவே என்னை பொறுத்த வரை இப்போதும் டெஸ்ட் போட்டிகள்தான் மகத்தானவை. ஏனெனில் ஒருவேளை நான் டெஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தினால் அது ஒருநாள், டி20 போன்ற மற்ற வகையான கிரிக்கெட்டையும் பார்த்துக் கொள்ளும் என்று கருதுகிறேன். அதே சமயம் நோ-பால் போட்டால் பிரீ ஹிட் என்ற விதிமுறை அகற்றப்பட வேண்டும்" என்று கூறினார்.