< Back
கிரிக்கெட்
விராட் கோலியுடன் அந்த ஆர்.சி.பி. வீரரும் ஸ்லெட்ஜிங் செய்தார்... அதனால்தான் கம்பீர்... - நவீன் உல் ஹக்
கிரிக்கெட்

விராட் கோலியுடன் அந்த ஆர்.சி.பி. வீரரும் ஸ்லெட்ஜிங் செய்தார்... அதனால்தான் கம்பீர்... - நவீன் உல் ஹக்

தினத்தந்தி
|
4 March 2024 5:58 PM IST

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணி வீரர் நவீன்-உல்-ஹக், விராட் கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கை கொடுக்க மறுத்தது பெரிய சர்ச்சையாக மாறியது.

காபூல்,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணி வீரர் நவீன்-உல்-ஹக், விராட் கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கை கொடுக்க மறுத்தது பெரிய சர்ச்சையாக மாறியது. அப்போது லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் விராட் கோலியுடன் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு வாக்குவாதம் செய்தது பெரிய சர்ச்சையாக மாறியது. இறுதியில் அந்த 3 பேருக்கும் ஐ.பி.எல். நிர்வாகம் போட்டி சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட அளவு அபராதமாக விதித்து தண்டனையும் கொடுத்தது.

இந்நிலையில் கடந்த வருடம் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் லக்னோவுக்கு எதிராக கடைசி பந்தில் 1 ரன் அடித்த ஆவேஷ் கான் ஹெல்மெட்டை தரையில் தூக்கி அடித்து வெறித்தனமாக கொண்டாடினார். அதை விரும்பாத காரணத்தாலேயே லக்னோவுக்கு வந்தபோது விராட் கோலியுடன் சேர்ந்து கொண்டு முகமது சிராஜூம் தம்மை ஸ்லெட்ஜிங் செய்ததாக நவீன்-உல்-ஹக் கூறியுள்ளார்.

அப்படி அவர்கள் ஸ்லெட்ஜிங்கை துவங்கிய காரணத்தினால்தான் கவுதம் கம்பீர் கடைசியில் வந்து தமக்காக விராட் கோலியுடன் சண்டையிட்டதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-

"நாங்கள் பெங்களூருவில் விளையாடிய போட்டியில்தான் அனைத்தும் துவங்கியது. அங்கு நெருக்கமான போட்டியில் நாங்கள் வென்றோம். எங்களுடைய ஒரு வீரர் (ஆவேஷ் கான்) வெற்றி ரன்களை அடித்த மகிழ்ச்சியில் ஹெல்மெட்டை தூக்கி எரிந்து கொண்டாடினார். அனேகமாக விராட் கோலி அதை விரும்பவில்லை.

பின்னர் அவர்கள் லக்னோவில் விளையாடுவதற்காக வந்தனர். அப்போட்டியில் 9 அல்லது 10வது இடத்தில் நான் பேட்டிங் செய்தேன். கடைசியில் அப்போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். ஆனால் அப்போது நான் ஸ்லெட்ஜிங் செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவர்கள் அவ்வாறு வம்பிழுக்கும்போது நாமும் விடக்கூடாது என்ற வகையில் நான் பதிலடி கொடுத்தேன். போட்டி முடிந்து இரு அணி வீரர்கள் கை கொடுக்கும் வரை அது நீடித்தது.

அந்த ஸ்லெட்ஜிங் விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகிய 2 பேரிடமிருந்து வந்தது. அதனால் கம்பீர் சண்டையை தொடர்ந்தார். ஏனெனில் கடந்த போட்டியில் 1 பந்தில் 1 ரன் தேவைப்பட்டபோது பெங்களூரு அணியின் பவுலர் எங்களை மன்கட் முறையில் அவுட்டாக்க முயற்சித்தார்.

அப்படி செய்வது சரியல்ல. ஏனெனில் சிறப்பாக விளையாடிய அந்த போட்டி மன்கட் முறையில் அவுட்டாகி முடிந்தால் அது அவமானமாகும். அதனால் பெங்களூரு ரசிகர்களுக்கு கவுதம் கம்பீர் வாய் மீது கை வைத்து அமைதியாக இருக்குமாறு சைகை கொடுத்தார். விராட் கோலியை போல அவரும் ஆக்ரோஷமானவர்" என்று கூறினார்.

இதன் பின்னர் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் பகையை மறந்து நட்பாக மாறியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகள்