< Back
கிரிக்கெட்
அந்த காரணத்தினாலேயே எம்.எஸ். தோனி மகத்தானவராக போற்றப்படுகிறார் - ரகானே

image courtesy: PTI

கிரிக்கெட்

அந்த காரணத்தினாலேயே எம்.எஸ். தோனி மகத்தானவராக போற்றப்படுகிறார் - ரகானே

தினத்தந்தி
|
13 April 2024 8:47 AM IST

தோனி இருப்பதால் அனைத்து மைதானங்களிலும் தங்களுக்கு சொந்த மைதானத்தைப் போன்ற ஆதரவு கிடைப்பதாக ரகானே கூறியுள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து விளையாடி வருகிறது. இம்முறை வருங்காலத்தை கருத்தில் கொண்டு அந்த அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த எம்.எஸ்.தோனி சாதாரண விக்கெட் கீப்பராக விளையாட வருகிறார். இருப்பினும் அவரை பார்ப்பதற்கு ஒவ்வொரு போட்டியிலும் ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்திய அணிக்காக 3 ஐ.சி.சி. கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதனால் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடும் அவரை பார்ப்பதற்காக மும்பை, பெங்களூரு, ஐதராபாத் என அனைத்து நகரங்களைச் சேர்ந்த ரசிகர்களும் தோனி என்ற ஒருவருக்காக மஞ்சள் உடை அணிந்து சி.எஸ்.கே. அணிக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.

இந்நிலையில் தோனி இருப்பதால் அனைத்து மைதானங்களிலும் தங்களுக்கு சொந்த மைதானத்தைப் போன்ற ஆதரவு கிடைப்பதாக ரகானே கூறியுள்ளார். அத்துடன் 2011-ல் இந்தியாவுக்காக அறிமுகமானபோது என்ன சொன்னாரோ அதே ஆலோசனையை சென்னை அணிக்காக அறிமுகமானபோதும் தோனி தம்மிடம் கூறியதாக தெரிவிக்கும் ரகானே இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"எங்கே பயணம் செய்தாலும் மஹி பாய் எனும் ஒரே ஒருவரால் நாங்கள் சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற சூழ்நிலையை பெறுகிறோம். அது அற்புதமான உணர்வு. அவருடன் சேர்ந்து விளையாடும்போது உங்களால் ஒரு வீரராகவும் மனிதராகவும் நிறைய கற்றுக் கொள்ள முடியும். தற்போது பல மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் சி.எஸ்.கே. அணியில் விளையாடுகின்றனர். அந்த சூழ்நிலை மிகவும் சிறப்பாக உள்ளது.

2011-ல் மான்செஸ்டரில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான நான் பயிற்சியை முடித்தேன். அப்போது என்னிடம் வந்த தோனி "இத்தனை நாட்களாக எப்படி விளையாடினீர்களோ அதே ஆட்டத்தை இப்போதும் களத்திற்கு சென்று வெளிப்படுத்துங்கள்" என்று சொன்னது இன்று வரை என்னுடன் ஒட்டிக் கொண்டுள்ளது. சொல்லப்போனால் சி.எஸ்.கே. அணியிலும் "உங்களுடைய ஆட்டத்தை மட்டும் விளையாடுங்கள். எந்த அழுத்தத்தையும் சேர்க்காதீர்கள்" என்று அதே வார்த்தையைத்தான் அவர் என்னிடம் சொன்னார். அந்த வகையில் மிகவும் எளிமையாக இருந்து ஒவ்வொருவருக்கும் ஆதரவு கொடுப்பதாலேயே அவர் மகத்தானவராக போற்றப்படுகிறார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்